தமிழ் எங்கள் உயிருக்கு நேர் கட்டுரை

tamil engal uyirukku ner katturai in tamil

செம்மொழியான தமிழ்மொழி மிகவும் தொன்மையான இனிமையான நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட மொழியாகும். நம்முன்னோர்கள் தமிழை உயிர் போல நேசித்தார்கள்.

பல மொழிகள் தோன்றி மறைந்திருந்தாலும் இன்றும் கம்பீரமாக தமிழ் மொழி நிலைத்து நிற்கின்றது.

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் கட்டுரை

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தமிழின் தொன்மை
  • தமிழின் செழுமை
  • தமிழின் இனிமை
  • எங்கள் கடன்
  • முடிவுரை

முன்னுரை

“தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்க நேர்” என்று பாடுகிறார் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.

உலகில் எத்தனையோ மொழிகளும் அதனை சார்ந்த மக்களும் இருந்தாலும் தமிழர்கள் தமது மொழியை கொண்டாடும் அளவிற்கு வேறுயாராலும் தமது மொழியின் மீது பற்று வைக்க முடியாது.

ஒரு தாய்க்கும் பிள்ளைக்குமான பிணைப்பை போல ஆழமான பிணைப்பை எமக்கு ஏற்படுத்தியது எமது தாய்மொழியின் சிறப்பாகும்.

தமிழின் தொன்மை

உலக மொழியியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சியின் படி தமிழ் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். இதற்கான இலக்கிய சான்றுகள் எம்மிடம் உள்ளன.

சங்ககால இலக்கியங்கள் தமிழின் தொன்மையினையும் தமிழர்களின் நாகரீகம் நிறைந்த வாழ்க்கை முறையினையும் எம் கண்முன் கொண்டு வருகின்றது.

இதன் தனித்துவமான பண்புகளினால் தான் உலகத்தின் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி வலம் வருவது நம் அனைவருக்கும் பெருமை தரும் விடயமாக உள்ளது.

தமிழின் செழுமை

உலக மொழிகளில் தமிழ் ஒரு தனித்துவமான மொழியாக திகழ்வதற்கு அதனுடைய இலக்கிய செழுமையே காரணமாகும்.

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் மேன்மை கொள்ள பல சரித்திர புகழ் கொண்ட இலக்கியங்கள் தமிழில் எழுந்தன.

மன்னனும் மக்களும் தமிழை காக்க தங்கள் உயிரையும் ஈந்தழிக்க சித்தமாய் இருந்தனர். இதுவே தமிழ் மொழி யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத புகழை பெற்று உலகமெங்கும் பரவியது.

தமிழின் இனிமை

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று பாரதியார் தமிழின் பெருமையினை நமக்கு எடுத்துக்காட்டுகின்றார்.

கேட்போரை மகிழ்விக்கும் இனிமையினையும் தன்மையும் எம் தமிழிற்கு உண்டு. அறம், காதல், வீரம், பக்தி போன்ற கருத்துக்களை பொருட்செறிவுடன் கவித்துவத்துடன் வெளிப்படுத்தும் ஏராளமான இலக்கியங்கள் தமிழில் உள்ளன.

“திருக்குறள்” போன்ற உலகப்புகழ் கொண்ட இலக்கியங்கள் தமிழின் பெருமைக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

எங்கள் கடன்

எமது முன்னோர்கள் தமிழுக்கு ஆற்றிய பணியினால் தான் தமிழ் வளர்ந்தது. பல அற்புதமான படைப்புக்கள் உலகத்தாரையும் எம்மையும் திரும்பி பார்க்க வைத்தது.

ஆகவே நாம் எமது முன்னோர்கள் விட்டு சென்ற பணியை தொடர வேண்டும். பிற மொழிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற இந்த காலகட்டத்தில் நாம் எமது மொழியின் தனித்துவத்தை நமது அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய ஒரு கட்டாயம் எங்கள் அனைவருக்கும் உண்டு.

முடிவுரை

“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே” என்ற பாரதியின் தமிழ்மொழி வாழ்த்து போலவே எமது உயிரினும் மேலான தமிழ் மொழியானது மென்மேலும் வளர நாம் அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.

இலக்கிய ஆர்வம் மற்றும் இலக்கிய படைப்பாளிகளாக எம்மை ஈடுபடுத்தி கொண்டு தமிழன்னைக்கு நாமும் அழகு சேர்ப்போம்.

You May Also Like:

செய்யும் தொழிலே தெய்வம் கட்டுரை