மனிதன் அடைந்து கொள்ள வேண்டிய நற்பண்புகள் பல உள்ளன. அவற்றுள் முதன்மையானதும் தலையாய ஒழுக்கங்களில் ஒன்றாகவும் உள்ளது தன்னடக்கம் ஆகும். இதுவே தனிமனிதனின் வாழ்க்கையை சிறப்பாக்கும்.
நீதியின் பால் ஒழுகல், அன்பு கருணை உடையவர்களாக இருத்தல், ஈகை குணம் இவையெல்லாம் ஒருவருக்கு இருப்பினும் தன்னடக்கம் இல்லாவிடில் இப்பண்புகள் சிறப்பாகாது.
கிரேக்க சிந்தனையாளரும், தத்துவஞானியுமான சாக்ரடீஸ் மனிதன் மேற்கொள்கின்ற முதல் நிலைப் பண்புகளாக தன்னடக்கத்தையும், புலன் அடக்கத்தையும் கூறியுள்ளார்.
உலகில் உயர் நிலையில் உள்ள ஞானிகளும், அவர்கள் நிலையில் இன்றும் போற்றப்படுவதற்கு அவர்களது அறிவுத்திறமைக்கு அப்பால் தன்னடக்கமும் முக்கிய காரணமாகும்.
தன்னடக்கம் தலைகுனியாது, தாழ்ச்சி அடையாது. அது நிமிர்ந்து நிற்கும். உண்மையை உரக்கச் சொல்லும். இத்தகைய தன்னடக்கமானது இரு பெரும் பிரிவுகள் உடையது.
அவையாவன பொறி அடக்கம், புலன் அடக்கம் என்பனவாகும். பொறியடக்கம் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளை அடக்குதல் ஆகும். இப்பொறிகளை இயக்கும் புலன்களை அடக்குதல் புலனடக்கம் எனப்படும்.
தன்னடக்கம் என்றால் என்ன
தன்னிலும் உயர்ந்தோர் எனக் கருதப்படுவோர் முன் பணிவுடன் நடக்கத் துண்டும் இயல்பூக்கம் தன்னடக்கம் எனலாம்.
தன்னடக்கத்தின் முக்கியத்துவம்
தன்னடக்க குணம் குறைந்து தற்பெருமை அதிகரிக்கும் போதும் ஒருவரின் முன்னேற்றம் தடைப்படுகின்றது. நம் முன்னேற்றத்தினை அதிகரிக்க வேண்டுமெனில் தன்னடக்கத்துடன் இருக்க வேண்டியது மிகமிக முக்கியமான ஒன்றாகும்.
தனிப்பட்டவரின் தன்னடக்கம் மனித சாதனையின் உச்சக்கட்டம் என்றே கூற வேண்டும். சாதனை படைத்த மற்றும் உலகளவில் போற்றப்படும் பலரும் தன்னடக்க குணம் உடையவர்களாகவே இருந்துள்ளதனைக் காண முடிகின்றது.
இன்று உலகில் அநேக தொந்தரவுகளுக்கு காரணம் தன்னடக்கமின்மையே ஆகும். தன்னடக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்கும் போது சமூகத்தில் பிரச்சினைகள், தொந்தரவுகள் குறையும் என்பதே நிதர்சன உண்மையாகும்.
மேலும், தன்னடக்கம் நம்முடைய வார்த்தைகளையும் நம்முடைய பேச்சையும் கூட கட்டுப்படுத்துகின்றது. தீய வார்த்தைகளோ அல்லது பிறர் மனதை காயப்படுத்தும் வார்த்தைகளோ நாம் வெளிப்படுத்துவதை கூட தன்னடக்கம் கட்டுப்படுத்த கூடியது.
தன்னடக்கத்தின் வழியாக நாம் எமது தனியுரிமையைப் பாதுகாப்பதுடன் நம்மை பிறர் தமது சுயநலத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க முடிகின்றது..
தன்னடக்கம் எனும் நல்லுணர்வு இல்லை என்றால் அன்பு, பாலுணர்வு போன்றவை உயிர்கள் மீதான மோகவெறிக்குள்ளும், ஆரோக்கியமற்ற செயல்பாடுகளுக்குள்ளும் தன்னை சுருக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது.
இதனால் அன்புகூர்வதற்குரிய நம் திறன் சிதைக்கப்படுவதுடன், பாலியல் வன்முறைகளின் வடிவங்கள், மற்றவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கும், அல்லது அவர்களைக் காயப்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது.
தன்னடக்கமுள்ளவனுக்கு நாளுக்கு நாள் பலம் அதிகரித்துக் கொண்டே போகும். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதுதான் தன்னடக்கத்தின் முதற்படியாகும்.
இதனை அனைவரும் உணர்ந்து, செயல்படுவதன் மூலம் சமூகத்தின் வன்முறைகள், பிறழ்வுகள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகின்றது. எனவே மனிதர்களாகப் பிறந்த அனைவரும் தன்னடக்கத்தினைக் கடைப்பிடிக்கும் போது சமுதாயம் நலம் பெறுகின்றது.
நாம் வாழ்வில் எவ்வளவு உயர்வைப் பெற்றுக் கொள்கின்றோமே அவ்வளவுக்கு அவ்வளவு நாம் தன்னடக்கத்தினைக் கடைப்பிடிப்பது அவசியமானதாகும்.
நாம் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு முன்பு தன்னம்பிக்கை எவ்வளவு அவசியமானதோ, அதைவிட வாழ்வில் வெற்றி பெற்ற பின்பு தன்னடக்கம் அவசியமானதாகும். தன்னடக்கம் கொள்வோம் தரணியில் உயர்வோம்!
You May Also Like: