“ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற நம் மூதாதையரின் திருவார்த்தையானது ஒவ்வொரு ஊரிலும் ஆலயம் என்பது கட்டாயம் அமைக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்பதை வலியுறுத்துகிறது. ஆலயங்கள் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் பெட்டகங்களாக காணப்படுகின்றன.
தஞ்சை பெரிய கோவில் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பெரிய கோயில் அமைவிடம் மற்றும் அமைப்பு
- தஞ்சைப் பெரியகோவிலின் சிறப்பு
- இறைவன் இறைவி திருநாமங்கள்
- ஆலய விழாக்கள்
- முடிவுரை
முன்னுரை
இந்தியாவின் சோழவள நாட்டின் மிகுந்த பெருமைக்குரிய இந்து சமய வழிபாட்டுத் தலங்களில் தஞ்சை பெரிய கோவில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இவ்வாலயம் ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமைகளை பறைசாற்றி உயர்ந்து நிற்கின்றது. தஞ்சை பெரிய கோயில் பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் நோக்குவோம்.
பெரிய கோயில் அமைவிடம் மற்றும் அமைப்பு
தஞ்சை பெரிய கோயிலானது, தஞ்சாவூரில் உள்ள சோழநாட்டு காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இது திருப்பாடல் பாடப்பெற்ற திருத்தலம் ஆகும். இவ்வாளையாத்தின் கோட்டை சுவர் வாயிலை அடுத்து உள்ள ஐந்து அடுக்கு கோபுர வாசலை “கேரளாந்தகன்” நுழைவாயில் என்று அழைப்பர்.
அதனை அடுத்து மூன்று அடுக்குகளுடன் அமைந்துள்ள வாயிலை “இராஜராஜன் திருவாயில்” என்று அழைப்பர். பெரியகோவில் கோபுரத்தை விட பெருவுடையாரின் விமானம் பிரமாண்டமானது. இது சுமார் 216 அடி உயரத்துடன் திகழ்கிறது. தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் 216 என்பதனால் கோபுரமும் 216 அடிகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆலயத்தின் வடபுற விமானத்திற்கு அருகே சண்டேஸ்வரரின் சந்நிதி அமைந்துள்ளது. திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகளும் காணப்படுகின்றன.
ஆரம்ப காலத்தில் வடக்கு புறம் ஓர் அம்மன் ஆலயம் காணப்பட்டதாக “திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி”என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. ஆனால் தற்காலத்தில் அம்மன ஆலயம் அழிவடைந்த நிலையில் காணப்படுகிறது.
ஆலயத்தின் மகா மண்டபம், அர்த்தம் மண்டபம் இவைகளை அடுத்தே கற்றளி விமானம் அமைந்துள்ளது. இந்த ஸ்ரீவிமானம் 30.18மீட்டர் அளவுடைய உயர்ந்த அதிர்ஷ்டமானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனை சுற்றி நான்கு புறமும் வாயில்களுடன் ஒரு சுற்று அறையுடனும் திகழ்கிறது.
இராஜராஜேஸ்வரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்க திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11 அடி கனமுடைய சுற்று சுவர்களுடனும் கருவறை உள்ளது. கருவறைக்கு வெளிப்புறம் ஆறு அடி அகலம் உடையதாக ஓர் அறை விழங்குகிறது. சிவலிங்கத்திற்கு மேலே அமைந்துள்ள விதானம் மரத்தால் ஆனது. இது தற்காலத்தில் அமைக்கப்பட்டது.
தஞ்சைப் பெரியகோவிலின் சிறப்பு
இந்திய நாட்டில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இது இந்திய நாட்டின் பாரம்பரிய சின்னமாகவும், தமிழர்களின் கட்டடக் கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது.
இவ்வாலயம் ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டுடன் இவ்வாலயம் அமைக்கப்பட்டு 1012 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என கூறப்படுகின்றது.
இக்கோவில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக, 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இறைவன் இறைவி திருநாமங்கள்
தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ள சிவலிங்கமூர்த்தி பெருவுடையார் எனவும் “தட்சிணமேருவீடங்கர்” எனவும், “இராசராசேச்சுவரமுடையார்” எனவும் பெயர் பெறுவர். தியாகராச பெருமாள் “தஞ்சை விடங்கர்” எனவும் நடராச பெருமான் “ஆடவள்ளான்” எனவும் பெயர் பெறுவர்.
அம்மையார் “பெரியநாயகி அம்மை” எனவும் “உமா பரமேஸ்வரி” எனவும் “உலகம் முழுதுமுடையாள்” எனவும் பெயர் பெறுவார். வடமொழியில் சுவாமியை பிரகதீஸ்வரர் என்றும் அம்மையை பிரசங்கநாயகி என்றும் கூறுவர்.
ஆலய விழாக்கள்
சோழமன்னர் காலத்தில் பெரியகோயிலில் ஒவ்வொரு மாதமும் இராஜராஜசோழன் பிறந்த நாளாகிய சதயநாள் விழாவும், கார்த்திகை மாத கார்த்திகை தீப விழாவும் நடைபெற்றன. இவையன்றி ஒன்பது நாள் வைகாசி பெருவிழாவும் நடைபெற்றது.
பின்னர் திருவாரூர் கோயிலில் நடைபெறுவது போல வைகாசி பெருவிழா 18 நாளாக சித்திரையில் இன்று வரை நடைபெற்று வருகிறது. சித்திரை பெருவளாவுக்கு கொடியேற்றம் நாளையும் ஆடல்வள்ளான் அதாவது நடராஜபெருமான் எழுந்தருளும் நாளையும் முன்னர் பறையடித்தும் தெரிவிப்பர்.
இராஜராஜன் பெருவுடையாராகிய சிவலிங்கப் பெருமானை நர்மதை நதி தீர்த்தத்தில் இருந்து கொண்டு வரும்போது 64 வீட்டு வேளாண்செட்டிமார்களும் உடன் வந்து சிறப்பித்தார்கள் என்று கூறப்படுகிறது.
அதற்கு அறிகுறியாக சித்திரைப் பெரிய விழாவில் அட்டக்கொடி அன்று, தஞ்சை மேலவீதி 64 வீட்டு வேளாண் செட்டிமார்களையும், சண்டேஸ்வரர் மூலம் மேளவாத்திய சிறப்புடன் அழைப்பித்து கோவில் மரியாதைகள் செய்யும் பழக்கம் அன்று தொடக்கம் இன்று வரை இருந்து வருகிறது.
இன்னும் வசந்த விழா, மார்கழி திருவாதிரை விழா முதலிய விழாக்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன.
முடிவுரை
இவ்வாறு பல சிறப்புகளை கொண்டு காணப்படும் தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் பெருமையை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. எமது மண்ணில் இதைப்போல பல பெருமைகள் நிறைந்துள்ளன அவற்றை பேணி பாதுகாத்து அடுத்து வரும் சந்ததிக்கு வழங்குவது எம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
You May Also Like: