தொற்றும், தொற்றா நோய் அச்சுறுத்தல்கள் பெருகி வரும் இக்காலக்கட்டத்தில் குறித்த ஒருவகை கொசுக்களினால் பரப்பப்படுகின்ற உலகையே ஆட்டிப்படைக்கும் நோயாக டெங்கு காய்ச்சல் காணப்படுகின்றது.
டெங்கு ஒழிப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நோயிற்கான காரணி மற்றும் பரம்பல்
- நோயின் அறிகுறி
- நுளம்பு பெருக்கம் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
இது உலகில் பெரும்பாலும் வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய நாடுகளில் ஏற்படுகின்றது.
டெங்கு காய்ச்சலானது முதலில் நோயாளிக்கு தலைவலியுடனான கடுமையான காய்ச்சல் இருப்பதாக இனங்காணப்பட்டு கடுமையான கட்டத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, இறுதியில் இரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டு மரணம் நிகழும் சாத்தியம் ஏற்படுகின்றது.
இது உடலை வருத்தும் நோய் என்பதால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் எனவும் அழைக்கப்படுகின்றது.
நோயிற்கான காரணி மற்றும் பரம்பல்
நோய்க்காவியாக ஈடிஸ் எனும் பெண் நுளம்பு வகையை சேர்ந்த ஈடிஸ் அல்போபிக்டஸ், ஈடிஸ் ஈஜிப்டி போன்ற நுளம்பு வகைகள் காணப்படுகின்றன.
கறுப்பு நிற உடலில் வெள்ளை வரிகளை கொண்ட இந்த நுளம்புகள் பொதுவாக சூரிய உதயத்திற்கு 2 மணித்தியாலம் பின்னரும் சூரிய அஸ்தமனத்திற்கு 2 மணித்தியாலம் முன்னரும் மேலும் பகல் வேளைகளிலே மனிதர்களை கடிக்கின்றன.
நோயின் அறிகுறி
டெங்கு வைரஸ் தாக்கப்பட்ட ஒருவருக்கு ஆரம்ப அறிகுறியாக கடுமையான காய்ச்சல், கண்களின் பின்புறம் வலி, தலைவலி, கை கால் மூட்டுவலி என்பன காணப்படும்.
பொதுவாக 2-7 நாட்கள் நீடித்த காய்ச்சல் காணப்படுவதோடு உடம்பில் சில இடங்களில் சிறிய சிறிய புள்ளிகள் தோன்றும். நோய் கடுமையாகும் போது இரத்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டு வாய் மூக்கு துவாரங்களூடாக சிறிய அளவில் இரத்தக்கசிவு ஏற்படுகின்றது.
நாளடைவில் கடுமையான இரத்தப்போக்கு ஏற்படலாம். இந்நிலை தொடர்ந்தால் குருதிக்குழாய்களில் குறைந்தளவான குருதி சுற்றோட்டத்திற்கு உட்படுத்தப்படுகின்றது.
இதனால் குருதிஅழுத்தம் குறைந்து முக்கிய உறுப்புகளுக்கு குருதி விநியோகம் குறைந்து மரணம் சம்பவிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஆனால் WHO அமைப்பானது தற்போது எல்லா நாடுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எச்சரித்துள்ளதால் தொற்று ஏற்படும் வீதம் மட்டுமன்றி மரணம் ஏற்படும் வீதமும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நுளம்பு பெருக்கம் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்
தேங்கி நிற்கும் சுத்தமான நீரிலேயே குறித்த வகை டெங்கு நுளம்புகள் முட்டையிட்டு இனத்தை பெருக்குகின்றன. டெங்கு வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பாதிக்கப்பட்ட கொசுக்கள் மூலமாகவே பரப்பப்படுகின்றன.
அது நோய்வாய்ப்பட்ட நபரைக் கடித்து வைரஸை ஏற்று பின் சுகதேகிகளை கடிக்கும் ஒவ்வொரு முறையும் நோயை பரப்புகின்றது. அக்கொசுவின் உமிழ்நீரின் மூலம் நுண்ணங்கிகள் கடத்தப்படுகின்றன.
டெங்கு வைரசுக்கு எதிரான தடுப்பூசி முறை இன்னும் ஆய்விற்குட்படுத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வதே இன்றியமையாததாகும்.
நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதோடு சுத்தமான நீர்த்தேங்கக்கூடிய இடங்களை முற்று முழுதாக அழித்து விட வேண்டும். மனித பயன்பாட்டிலுள்ள நீர்தேக்கங்களை முறையாக மூடி பயன்படுத்த வேண்டும்.
உடலை முழுமையாக மூடக்கூடியவாறு ஆடைகள் அணிவதோடு தூங்கும் போது நுளம்பு வலைகளை உபயோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முடிவுரை
உலகளவில் 2016ஆம் ஆண்டு பெரும்பான்மையான டெங்கு நோய்த்தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 2021-2022 ஆண்டு காலப்பகுதிகளில் டெங்கு நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கையும் டெங்கு நோயால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆபத்தான இந்த நோயில் இருந்து எம்மையும் எமது குடும்பங்களையும் பாதுகாக்கவேண்டியது எமது கடமையாகும்.
வைத்திய துறையினரின் ஆலோசனைகளை பின்பற்றி நமது சூழலை நோய்கள் உருவாகாத சூழலாக மாற்றி டெங்கு மற்றும் பிற நோய்களில் இருந்து விடுபடுவோம்.
You May Also Like: