இந்த உலகில் பலரும் பலவிதமான தொழில்களை செய்துகொண்டு இருக்கின்றார்கள். சிலர் சில தொழில்களை தாழ்ந்த தொழிலாக பார்க்கிறார்கள். இது அவர்களின் முதிர்ச்சி இன்மையையும் அறிவிலிதனத்தையுமே பிரதிபலிக்கின்றது.
தொழில்களில் உயர்ந்த தொழில் தாழ்ந்த தொழில் என்று எதுவுமே கிடையாது. நாம் செய்யும் தொழிலை நேசித்து செய்ய பழக வேண்டும்.
செய்யும் தொழிலே தெய்வம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- முன்னேற வழி
- ஈடுபாடு
- மனநிறைவு
- மேன்மை
- முடிவுரை
முன்னுரை
“செய்வன திருந்த செய்” என்ற ஒளவையாரின் வாக்கிற்கிணங்க நாம் எடுத்து கொண்ட எந்த தொழிலாக இருந்தாலும் அதனை சரியாகவும் முறையாகவும் செய்வதன் மூலமாக வாழ்வில் உயர்நிலைகளை அடையலாம் என்பது திண்ணமாகும்.
உலகத்தில் பல்வேறு வகையான தொழில்கள் காணப்படுகின்றன. இவை இல்லா விட்டால் இந்த உலகம் சீராக இயங்காது. ஒவ்வொரு மனிதர்களும் இங்கு பிழைத்திருக்க தொழில் என்பது அத்தியாவசியமானதாக இருக்கின்றது.
முன்னேற வழி
மனித வாழ்க்கையில் தினமும் அவனது தேவைகளான உணவு, உடை, உறையுள் மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்ய பணம் தேவைப்படுகின்றது. ஏதாவது ஒரு தொழிலை மனிதன் செய்வதன் வாயிலாகவே மனிதன் இங்கே வாழ முடிகின்றது.
உழைப்பு என்பது இல்லாவிட்டால் இங்கு நமக்கு அதற்கேற்ப ஊதியம் கிடைக்காது. ஆகவே நமக்கு கிடைத்த தொழிலை சரியாக பயன்படுத்தி அதற்கு எமது கடின உழைப்பை செலுத்துவதனால் வாழ்வில் படிப்படியாக எம்மால் முன்னேறிவிட முடியும்.
ஈடுபாடு
எம்மில் பலர் எமக்கு கிடைத்த தொழிலின் மீது அதிகம் அக்கறை கொள்வதில்லை அதன் கடின தன்மைகளை பொறுத்து அதில் நமக்கு சலிப்பு தன்மையும் உருவாகிவிடும்.
இதனால் விருப்பமின்றியே இங்கு பலர் தமது தொழில்களை ஆற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் அந்த துறையில் வெற்றி பெறவோ முன்னேறவோ முடியாமல் போய்விடும்.
மாறாக தாம் செய்கின்ற வேலையில் அதிக கரிசனையும் ஈடுபாடும் உடையவர்கள் மிகவும் ஆர்வத்தோடு அந்த தொழிலை செய்வதனால் அதற்கான வெகுமதியினையும் புகழையும் அடைகின்றார்கள்.
மனநிறைவு
இன்றைய காலகட்டத்தில் எந்த தொழில் எங்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டி தருகின்றதோ அதனையே அதிகளவானோர் நாடி செல்வதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
இது பணத்தை அதிகம் ஈட்டி தந்தாலும் மனநிம்மதியை தராது. மாறாக எமக்கு மனதுக்கு பிடித்த தொழிலை மகிழ்ச்சியாக செய்வதனால் எமக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் வாழ்வில் உண்டாகும்.
இதனையே எம் முன்னோர் “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று கூறினார்கள். நாம் எந்த தொழிலை ஆற்றினாலும் அதற்கு உண்மை உள்ளவர்களாக இருப்பது சிறப்பு.
மேன்மை
நாம் எந்த துறையினை தேர்வு செய்தாலும் அந்த துறையில் சிறப்பு தேர்ச்சி உடையவர்களாக இருக்க வேண்டும். ஒரு துறையில் நாம் வளர்ச்சி அடையவும் அதில் நல்ல பெயரையும் இந்த சமூகத்திடையே நல்ல வரவேற்பையும் பெற இது உதவுவதாக அமையும்.
தனக்கு பொருத்தமான தொழில் எது என்பதை அடையாளம் கண்டு அந்த துறையில் விருப்பத்தோடு கடினமாக உழைத்தால் வாழ்வின் உயரங்களை தொடமுடியும் என்பது வெற்றி பெற்ற மனிதர்களுடைய கருத்தாகும்.
முடிவுரை
இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதர்களையும் வாழ்வித்து கொண்டிருக்கின்ற தொழில்கள் உன்னதமானவை அவற்றிற்கு உண்மை உடையவர்களாக அதனை திறம்பட செய்ய கூடியவர்களாக மனிதர்கள் இருக்கின்ற போது இந்த உலகம் உயரிய நிலையினை அடைந்து கொள்ளும் பிறரை ஏமாற்றாத வஞ்சிக்காத எல்லா தொழில்களும் மேன்மையானவை.
இவற்றினை மதித்து வாழ்வின் உன்னத நிலையினை நாம் அடைந்து கொள்ள வேண்டும்.
You May Also Like: