சுயமரியாதை என்றால் என்ன

suyamariyathai endral enna

சுயமரியாதை என்றால் என்ன

ஆரோக்கியமான சுயமரியாதையே ஒரு நபருக்கு வாழ்க்கை ஆறுதலையும், சீரான நம்பிக்கையையும் தருகிறது.

சுயமரியாதை சவால்களைச் சமாளிக்கவும், வாழ்க்கையில் எதிர்ப்புத் திறனைக் கட்டமைக்கவும், நமது உணர்ச்சி ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றது.

முதலில் நம்மை நாம் மதிக்கவில்லை என்றால், நிறைவான, அர்த்தமுள்ள மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது சாத்தியமற்றது. எனவே நாம் சுயமரியாதையை வளர்த்துக் கொள்வது இன்றியமையாததாகும்.

அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு சுயமரியாதை முக்கியமான ஒன்றாகும். சுயமரியாதை உள்ளவர்களால் மட்டுமே தமது வாழ்க்கையை திறன்படவும், கௌரவத்துடனும் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

பிறர் விமர்சனங்களை கேட்காமலும், தம் திறமைகள் மீது நம்பிக்கையுடனும் வாழ்வதற்கு சுயமரியாதை வழிவகுக்கின்றது.

சுயமரியாதை என்றால் என்ன

சுயமரியாதை பற்றி பலரும் தமது அறிவுப் புலமைக்கு ஏற்ற வகையில் பலவாறு வரைவிலக்கணப்படுத்துகின்றனர். எனினும் சுருக்கமாக கூறுவதாயின், சுயமரியாதை என்பது தன்னைப் பற்றிய ஒரு நபரின் அணுகுமுறை எனக் கூறலாம்.

உளவியலின் கண்ணோட்டத்தில் சுயமரியாதை பிறப்பிலிருந்து நாம் உருவாக்கும் திறன் என வரையறை செய்யப்படுகின்றது. மேலும், உளவியலில் சுயமரியாதையானது ஒரு நபர் தன்னைப் பற்றிய கருத்துக்களின் தொகுப்பாக கருதப்படுகின்றது.

சுயமரியாதையை வளர்த்துக் கொள்வதற்கான வழிகள்

ஒருவர் சுயமரியாதையை அடைந்து கொள்வதற்கான முதல் வழிமுறை தங்களைத் தாங்களே ஏற்றுக் கொள்வதாகும். நம்மை நாமே ஏற்றுக் கொள்ளும் போது உள்ளம் வலுப்பெறுகின்றது. நம்மை நாமே நேசிக்கும் போதும், நம்பிக்கை கொள்ளும் போதும் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள முடியும்.

நமது மதிப்புகளை மறுபரிசீலனை செய்ய முயற்சிக்க வேண்டும். முதலில் நமது மதிப்புகள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மதிப்புகள் என்பது வாழ்க்கையில் நமக்கு எது முக்கியமானது அல்லது விரும்பத்தக்கது என்பது பற்றிய உறுதியான நம்பிக்கைகள் ஆகும்.

உதாரணத்திற்கு நேர்மை, சகிப்புத்தன்மை, விசுவாசம், பெருந்தன்மை, ஒத்துழைப்பு, ஞானம், அர்ப்பணிப்பு போன்றவை வாழ்வில் முக்கியமானவை ஆகும். இவற்றை எதற்காகவும் நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது.

விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். நம்மை நாமே விமர்சித்துக் கொள்வதையும், பிறர் நம்மை விமர்சிப்பதை அனுமதிப்பதையும் அல்லது அதை செவிமடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

பிறருடன் நம்மை நாமே ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அனைவரும் ஒரே மாதிரியாக இருந்துவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது.

சொந்த திறமைகளைக் கொண்ட ஒரு தனித்துவமான நபர் நான் என சுயநம்பிக்கை கொள்ள வேண்டும்.

பிறரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். நாம் விரும்பும் சுயமரியாதையுடன் மற்றவர்களையும் நடத்த வேண்டும். மற்றவர்களை சமமாக பார்க்கும் ஒருவர் மிக விரைவாக சுயமரியாதையை வளர்த்துக் கொள்வார். எனவே பிறரை மதிக்கும் பண்பை வளர்த்துக் கொள்வது முக்கியமானதாகும்.

உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சுயமரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது. அன்பிற்குரிய ஒரு உறவின் பிரிவைத் தாங்கிக் கொள்வது என்பது எளிதல்ல. எனினும் அதைவிட சுயமரியாதை முக்கிமானதாகும்.

புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கும், மாயைகளிலிருந்து வெளிவருவதற்கும் சுயமரியாதையை மேம்படுத்த வேண்டும்.

சுயமரியாதையை அதிகரிப்பது என்பது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனவே எப்போதும் வாழ்வில் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

You May Also Like:

தன்னடக்கம் என்றால் என்ன