சிறுவர்கள் சமூகத்தில் பல துஷ்பிரயோகங்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இது அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிடும். எனவே சமூகத்திலுள்ள நாம் ஒவ்வொருவரும் சிறுவர் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது கடமையாகும்.
சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன
- துஷ்பிரயோக காரணிகளும் தடுக்கும் வழிகளும்
- இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்
- முடிவுரை
முன்னுரை
உலகளவில் தற்போது நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. இதனால் அப்பாவி சிறுவர்கள் சிறுவர் கடத்தல் சம்பவங்கள், சிறுவர் கொலைகள், குழு மோதல்கள், அங்கங்களை சிதைத்தல் போன்ற இன்னல்களுக்கு உள்ளாகின்றார்கள்.
இச்சிறார்கள் விடயத்தில் மக்கள் மட்டுமல்லாமல் சில ஆட்சியாளர்கள் கூட அலட்சியப்போக்கைக் கையாள்வது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கின்றன.
சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன
சிறுவர்களை அடித்தல், காயப்படுத்தல், வன்முறை சம்பவங்களில் ஈடுபடுத்தல் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல் என்பவற்றை சிறுவர் துஷ்பிரோயகம் என குறிப்பிடலாம்.
பிள்ளைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்களோ அதையே தான் அவர்கள் மற்றவர்களுக்கு செய்ய முயல்கிறார்கள்.
ஒரு ஆசிரியரிடமோ அல்லது பெற்றோரிடமோ வழமையாக அடி வாங்கும் ஒரு பிள்ளையை கவனித்தால் ஒரு சந்தர்ப்பத்தில் அடி வாங்குவது என்பது அப்பிள்ளைக்கு பழகிப்போன ஒன்றாக ஆகிவிடுகிறது. எனவே அப்பிள்ளை அவ்வகையான கண்டிப்பிற்கு பயப்படாது தவறுகளை துணிந்து செய்யும்.
துஷ்பிரயோகங்களால் ஏற்படும் வலியும் வேதனையும் பிள்ளைகளின் உளநலத்தையும் நிச்சயம் பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
துஷ்பிரயோக காரணிகளும் தடுக்கும் வழிகளும்
பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள் காலப்போக்கில் மனதால் பாதிக்கப்பட்டு தனக்கு ஏற்படும் அநிதிகளை தட்டிக்கேட்க தைரியமாக உருமாறுகிறார்கள்.
இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் வழிகள் சமூகத்தில் சரியா தவறா என்று பார்க்காமல் அவர்களுக்கு தோன்றுகின்ற முடிவை சரியென எண்ணி செய்வது துஷ்பிரயோகங்கள் மேலும் வளர்ந்து செல்வதற்கான காரணியாகத் திகழ்கின்றன.
தவறிழைக்கும் ஒவ்வொருவரையும் சமூகம் ஒதுக்கினாலும் அவர்கள் தமது பெற்றோர்களால், ஆசிரியர்களால், பொறுப்பாளர்களால் ஒழுங்காக வழிப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.
சிறுவர் பாதுகாப்பின் அவசியத்தை பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் ஒன்றியம் உருவாக்கப்பட்டு, அது 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே பெற்றோர், ஆசிரியர்கள் ஆகிய நாம் வளர்ப்பதற்கு தேவையான கண்டிப்புக்களை கொடுக்கும் அதே சமயம் அளவுக்கு அதிகமான அதட்டல்களை கொடுக்கக்கூடாது. அவர்களின் திறமைகளுக்கும், ஆசாபாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்காமல் அவர்களை வளரவிட வேண்டும்.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்
சிறுவர்களின் பாதுகாப்பை உணர்ந்ததால் தான் “இந்தியாவின் நாளைய எதிர்காலம் சிறுவர்களே” என டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் கூறியுள்ளார்கள். சிறுவர்கள் சார்பாக இன்று உலகலாவிய ரீதியில் பெரும் முக்கியத்துவம் செலுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய சிறுவர்கள் தான் நாளைய தேசத்தை கட்டியெழுப்பும் தூண்கள் ஆவார்கள். நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் இச் சிறார்களை நாம் சரியான வழியில் வழிநடாத்த வேண்டும்.
முடிவுரை
வன்செயல் மூலம் பிள்ளையொன்றுக்கு துன்பம் ஏற்படும் போது சிறுவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பங்களும் அவர்களுடைய சமூகங்களை சேர்ந்த அனைவருமே பாதிக்கப்படுகின்றனர்.
அன்பான பெற்றோர்கள், உயர்த்தி விடும் தியாக எண்ணம் கொண்ட ஆசிரியர்கள், மிகச்சிறந்த அரசாங்கம், நல்ல நண்பர்கள் கொண்ட சூழல் இச்சிறுவர்களுக்கான சரியான வழிகாட்டல்களாகும். சிறுவர்கள் மிகவும் பாதுகாப்போடு வளரக்கூடிய சூழலை கொண்டிருக்கும் நாடே உலகத்தில் மிகச்சிறந்த நாடாகும்.
You May Also Like: