ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து செல்வங்களையும் விட கல்விச் செல்வமே உயர்வானதாகும். அதாவது ஒருவனை அறிவாளியாக ஆக்குவதும், அறியாமை எனும் இருட்டை போக்குவதும் இந்த கல்வியாகும். நல்ல புத்தகங்களின் அறிவு கண்ணைத் திறக்கும் திறவுகோல்கள் எனலாம்.
எனவே கல்வி ஒருவனை மட்டும் மேம்படுத்தாது அவனைச் சார்ந்தவர்களையும், சமுதாயத்தையும், ஏன் அந்த நாட்டையும் உயர்த்தக்கூடிய ஒன்றாகும்.
கல்வியே அழியாத செல்வம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கல்வியின் அவசியம்
- கல்வியின் சிறப்பு
- கற்றதன் பயன்கள்
- கல்லாமையின் விளைவுகள்
- முடிவுரை
முன்னுரை
ஒருவனுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து செல்வங்களும் அழிந்து போகக்கூடியனவாகவே காணப்படும். ஆனால் இந்த கல்விச் செல்வமானது நிரந்தரமான ஒன்றாகும்.
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர், உணவு, வளி என்பன எவ்வளவு அவசியமோ அதேபோன்று ஒருவனுடைய அறிவை வளர்ப்பதற்கும், சரி எது, தவறெது என்பதை புரிந்து கொள்வதற்கும் இந்த கல்வி அவசியம் எனப்படுகின்றது.
எனவே இந்த அழிவில்லாத செல்வமாகிய கல்விச் செல்வத்தை அடைந்து கொள்வதற்கு முயற்சிப்பது எம்மனைவரினதும் கடமையாகும்.
கல்வியின் அவசியம்
மனிதர்களின் வாழ்வு சிறந்து விளங்க வேண்டுமாயின் கல்வி கற்றல் என்பது அவசியமானதாகும். திருவள்ளுவர் குறிப்பிடுகையில் “விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்” என்கின்றார்.
அதாவது மனிதனை ஏனைய விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவது கல்வி தான் என குறிப்பிட்டுள்ளார்.
தற்காலங்களை பொறுத்த வரைக்கும் கல்வி அறிவு இல்லாமல் எமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது என்பது மிகவும் கடினமானது. எந்த ஒரு வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்கும் கல்வி அறிவு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.
கல்வியின் சிறப்பு
உலகில் காணப்படும் அனைத்து செல்வங்களும் கள்வர்களால் திருடப்படக் கூடியவை ஆனால் இந்த கல்வி செல்வத்தை மாத்திரம் யாராலும் திருடவே முடியாது எனும் அளவுக்கு சிறப்பு பெற்றதாகும்.
“கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” என திருவள்ளுவர் மற்றவர்களிடம் இருக்கும் பணம், பொருள், செல்வம் காலத்தால் அழியக்கூடியவை என்றும் கல்விச்செல்வம் மட்டுமே காலத்தால் அழியாது எனக் கூறுவது இதன் சிறப்பாகும்.
மேலும் உலகத்தை நல்ல வழியில் மாற்றம் சக்தி கல்விக்கு உள்ளது. என்ற நெல்சன் மண்டேலாவின் கருத்து, கல்வி கற்காமல் இருப்பவர்கள் பிறக்காமல் இருந்திருக்கலாம் எனும் அரிஸ்டோட்டிலின் கருத்து, பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற ஔவையாரின் வாசகம் இவை அனைத்தும் கல்வியின் சிறப்புக்களையே எடுத்துக்காட்டுகின்றன.
கற்றதன் பயன்கள்
கல்வி கற்று தெளிந்த ஒருவர் சமூகத்தில் எப்பொழுதும் உயர்வான ஒருவராகவே கருதப்படுவார். அதாவது ஒரு செல்வந்தன் கால சூழ்நிலையின் காரணமாக ஏழையாக மாறலாம் ஆனால் கற்றோர் எப்பொழுதுமே உயர்வானவர்களாகவே இருப்பார் என்பதாகும்.
“மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின்….” என ஔவையார் குறிப்பிடுகையில் மன்னனுக்கு தன் தேசத்தில் மட்டும் தான் சிறப்பு. ஆனால் கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என கற்றதன் மூலம் ஒருவரையும் பயன்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
அறியாமையில் இருப்பவர்களுக்கு நன்கு கற்றறிந்த ஒருவர் தன்னுடைய கல்வி அறிவினால் உதவி செய்வதும் கல்வியின் பயனாகும்.
கல்லாமையின் விளைவுகள்
கல்வியினை கற்றுக்கொள்ள முனையாதவர்கள் மனித பண்புகள் இன்றி தவறான வழிகளில் செல்பவர்களாகவே காணப்படுவார். திருவள்ளுவர் குறிப்பிடுகையில் கல்வி அறிவினை பெற விளையாதவர்கள் விலங்குகளை போன்றவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திருவள்ளுவர் “கண்ணுடையோர் என்போர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதோர்” என்ற அடிகளின் மூலமாக கல்வி கற்றவர்கள் மட்டுமே கண்ணுடையவர்களாக கருதப்படுகின்றனர் கல்வி கற்காத ஏனையவர்கள் இரண்டு கண்கள் இருந்தும் கண் இல்லாதவர்களாகவே கருதப்படுகின்றனர் என்கின்றார்.
இவ்வாறாக நோக்குகையில் கல்வி என்பது அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது. அதனை கல்லாமல் விடுவது எமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகமாகும்.
முடிவுரை
கல்விச்செல்வம் ஏனைய எல்லாச் செல்வங்களை விடவும் உயர்வானதாக காணப்படுவதற்கான காரணம். வெள்ளத்தால் அழியாததாகவும், நெருப்பினால் வேகாததாகவும், யாராலும் கொள்ளையடிக்க முடியாததாகவும், கொடுத்தாலும் குறையாத ஒன்றாகவும் காணப்படுவதனால் ஆகும்.
நெல்சன் மண்டேலா அவர்களது கருத்துக்கு இணங்க இந்த உலகையே மாற்றி அமைக்கக்கூடிய ஒரு பலமான ஆயுதமாக இந்த கல்விதான் காணப்படுகின்றது. எனவே இந்த அழிவில்லாத கல்விச் செல்வத்தை நாம் அனைவரும் கற்று பயன்பெறுவது அவசியமானதாகும்.
You May Also Like: