கல்வியின் முக்கியத்துவம் கட்டுரை

kalvi mukkiyathuvam katturai in tamil

கல்வியின் முக்கியத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கல்வியின் அவசியம்
  3. கற்றோரின் பெருமைகள்
  4. கற்பதன் பயன்கள்
  5. கல்லாமையின் விளைவு
  6. அழியாத செல்வம்
  7. முடிவுரை

முன்னுரை

கல்வி என்பது ஒருவருடைய அறிவையும் ஆற்றலையும் உயர்த்தி சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தை தரும் ஒரு செல்வமாகும். கல்வி என்பது ஒருவனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பதோடு நேரத்தின் மதிப்பையும் கற்றுக் கொடுக்கின்றது.

ஒருவன் தான் குழந்தையாக இருக்கும் போது கற்க ஆரம்பித்து மரணப்படுக்கைக்கு செல்லும் வரை கற்றுக் கொண்டே தான் இருக்கின்றான். வாழ்வில் கல்வி என்ற விளக்கு ஏற்றாமல் அவனது வாழ்வானது ஒளிர முடியாது.

அதனாலேயே ஔவையார் “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்கிறார். அதாவது பிச்சை எடுத்தேனும் கல்வி கற்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரும் அறியாமை என்னும் இருள் நீங்கி வாழ வேண்டுமாயின் அவர்களுள் கல்வி என்னும் விளக்கு ஏற்றப்பட வேண்டும். அவ்வளவுக்கு கல்வி என்பது இன்றியமையாததாகும்.

கல்வியின் அவசியம்

உலகில் எத்தனையோ செல்வங்கள் காணப்படுகின்றன. அவை அழிந்தாலும் கல்வி செல்வம் என்பது எதனாலும் அழியாத செல்வமாகும். ஆதலால் கல்வி என்பது அவசியமாகும்.

கல்வி என்பதை நாம் ஒருவரிடம் இருந்து பொருளாகவோ விலை கொடுத்தோ பெற முடியாது. நாம் கற்றால் மட்டுமே கல்வியை பெற முடியும். அனுபவம் மூலம் கற்பதும் கல்விதான் அவ்வகையில் ஒருவன் பிறப்பது முதல் இறப்பது வரை கற்றுக் கொண்டே இருக்கின்றான்.

அவ்வழியில் ஒருவன் நற்குணம் பெற்றும் உயர்வான எண்ணங்கள் பெற்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற கல்வி என்பது அவசியமாகும். விலங்குகளில் இருந்து மனிதனை பிரித்துக்காட்ட கல்வி அவசியம் என்கிறார் வள்ளுவர்.

கற்றோரின் பெருமைகள்

கல்வியைக் கற்றவர் என்றும் மேலும் வளர்வார்களே தவிர என்றும் வீழ்ந்திவிட மாட்டார்கள். ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏழையாகலாம் பணக்காரன் ஆகலாம் ஆனால் கல்வி அறிவுடையோர் என்றும் உயர்ந்த நிலையையே அடைவான் அவனுக்கு வீழ்ச்சி என்பது அரிது.

இதனை ஔவையார் “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் மாசறக்கற்றோன் சிறப்புடையவன் மன்னனுக்கு தன் தேசமல்லாமல் சிறப்பில்லை கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்கிறார்.

எனவே கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது இதன் மூலம் புலனாகின்றது. மேலும் கல்வியை அறம் சார்ந்து கற்பதன் மேலும் சிறப்புடையவன். எவன் புத்தகம் நோக்கி தலை குனிகின்றானோ அவன் உலகில் தலை நிமிர்ந்து வாழ்வான்.

சிறப்புற கல்வியை கற்றவன் என்றுமே சிறப்புடையவர்கள் அவர்கள் என்றும் மங்கா மாணிக்கம் போன்றவர்கள். இவ்வாறு கல்வியால் சிறந்தவர்கள் பலரை நாம் உதாரணம் காட்டலாம்.

அவ்வகையில் அறிஞர் அப்துல் கலாம், நெல்சன் மண்டேலா, ஔவையார் போன்ற பலர் கல்வியால் சிறந்தவர்கள்.

கற்பதன் பயன்கள்

கல்வி என்பது ஒரு அச்சய பாத்திரம் போன்றது கல்வி கற்க கற்க பயன் கூடுமே தவிர என்றும் குறையாது. கல்வியானது கற்வனுக்கு மற்றும் பயன்தரக்கூடியதாக இல்லாமல் எல்லோருக்கும் பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

மேலும் பொருள் சார்ந்த கல்வியை விட அறம் சார்ந்த கல்வியே மேலும் அதிக பயனை விளைவிக்கக் கூடியது. கற்றால் மட்டும் போதாது அதன் வழியில் நிற்க வேண்டும்.

அதனையே வள்ளுவர் “ கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று கூறுகின்றார். எனவே கல்வியின் பயனை அறிந்து அனைவரும் கல்வி கற்க வேண்டும்.

கல்லாமையின் விளைவு

கல்லாமையின் காரணமாக பல விளைவுகளும் ஏற்படுகின்றது. பூமியில் பிறந்த ஒருவன் கற்காவிட்டால் அவன் பல இன்னல்களுக்கு ஆளாவான். கற்றவன் உயர்வான் கல்லாதவன் தாழ்வான்.

கல்வி என்பது முகத்தில் இருக்கும் இரண்டு கண்களுக்கு ஒப்பானதாக திருவள்ளுவர் கூறுகின்றார். அதனையே கற்காதவன் முகத்தில் இரண்டு கண்களை அன்றி புண்களை உடையவன் என்று அவர் கல்லாதவனை பற்றி விவரிக்கின்றார்.

இதன் மூலம் கல்லாதவர் பார்வை இழந்தவர் அவரை அறியாமை எனும் இருள் சூழ்ந்து கொண்டே இருக்கும் அதனால் ஒருவன் கல்வி கற்க வேண்டிய அவசியத்தையும் இதன் மூலம் எடுத்துக்காட்டுகின்றார்.

அழியாச் செல்வம் கல்வி

உலகத்தில் எத்தனை செல்வங்கள் காணப்பட்டாலும் அழியாத ஒரே ஒரு செல்வம் கல்விச்செல்வம் ஆகும். இது சுனாமியினாலோ வெள்ளத்தினாலோ பாதிப்படையாது. அதாவது இயற்கையினாலோ செயற்கையினாலோ கல்வியை எவராலும் அழிக்க முடியாது.

எமது உடல் அழிந்து போகுமே தவிர நாம் கற்ற கல்வி என்றுமே அழியாது. ஆகவே அழியாச் செல்வம் கல்வியை நாம் கற்க வேண்டும் எப்போதும் நிலையான செல்வத்தை அடைந்து கொள்ள எம்முள் ஒரு அவா இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

“பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது” என மகாத்மா காந்தி கூறுகின்றார். இவ்வாறான கல்வியின் சிறப்பை அறிந்து நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டும்.

முடிவுரை

நெல்சன் மண்டேலா கூறியதற்கு இணங்க கல்வி உலகில் உள்ள வளமான ஆயுதம். பூமியில் பிறந்த நாம் இவ்வுலகை வெல்ல கல்வி எனும் ஆயுதத்தை பயன்படுத்தலாம். கல்வியை கற்போம் நாமும் உயர்வோம் பிறரையும் உயர்வடையச் செய்வோம்.

You May Also Like:

பெண்மை பற்றிய கட்டுரை

கல்வி கண் திறந்தவர் கட்டுரை