உலகில் தொன்மை மிக்க மொழிகளில் ஒன்றாக காணப்படும் தமிழ் மொழியானது “முத்தமிழ்” என சிறப்பாக அழைக்கப்படுகின்றது.
இது இசைத்தமிழ், இயற்றமிழ், நாடகத் தமிழ் எனும் முத்தமிழை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்தவகையில் நாடகம் என்றால் என்ன என்பதையும் மற்றும் ஓரங்க நாடகம் பற்றியும் சற்று நோக்குவோம்.
நாடகம் என்றால் என்ன
இயலும், இசையும் கலந்து கதையை தழுவி நடித்துக் காட்டுவது நாடகமாகும்.
நாடகம் என்பது நாடு+அகம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நாட்டை அகத்தில் கொண்டது நாடகம் ஆகும்.
நாடகங்கள் ஒரு மனித இனத்தின் வாழ்க்கை முறைகளையும், அவர்களின் வாழ்வின் அவலங்களையும் எடுத்துக் கூறும் சிறந்த ஊடகமாகவும் காணப்படுகிறது.
நாடகத்தின் தோற்றம்
மனிதன் என்று அறிவுபெற்றுத் தோன்றினானோ அன்றே நாடகமும் ஏதோ ஒரு முறையில் தோற்றம் பெற்றிருக்கக் கூடும்.
மனிதனின் விளையாட்டு உணர்வும், பிறரின் செயல்களை நடித்துக் காட்ட விரும்பும் இயல்பும் நாடகங்கள் தோன்றக் காரணங்களாக அமைந்திருக்கலாம்.
பொதுவாக நாடகத் தோற்றம் பற்றி தெளிவான கருத்தை அறிய முடியாமல் உள்ளது. நடனத்திலிருந்து தான் நாடகம் தோன்றியிருக்க வேண்டும் என்பர் சிலர், சமயச் சடங்குகளிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் கூறுவர்.
பொதுவாக சடங்கிலிருந்தே நாடகம் தோன்றியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக காணப்படுகிறது.
புரதான மனிதன் பருவகால மாற்றங்களையும், இயற்கையோடு நிகழும் பல மாற்றங்களையும் கண்டு இவை தனக்கு மேலான சக்திகளின் செயற்பாடே என்று நம்பினர்.
அவற்றினை அடிப்படையாகக் கொண்டே சடங்குகள் உருவாகின. இதுவே நாடகமாக வளர்ந்தது. உலக நாடகத்தின் தோற்றம் எகிப்திலிருந்து தொடங்குவதாக நாடக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் நாடகம் தோன்றிவிட்டது.
ஐந்து விதமான எகிப்திய நாடகங்கள் இருந்தன. எகிப்தில் நாடகங்கள் தோற்றம் பெற்றாலும் திட்டவட்டமான தகவல்களுடன் வரலாறு தொடங்குவது கிரேக்க நாடகத்திலிருந்தே எனலாம்.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, ஐப்பான் எனப் பல இடங்களிலும் தோற்றம் பெற்றது.
ஓரங்க நாடகம் என்றால் என்ன
ஒரு நாடகத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களையும் மேடையில் அல்லது வானொலியில் ஒருவரே செய்வது ஓரங்க நாடகம் என அழைக்கப்படுகிறது.
இது நாடக ஆய்வாளர் பேராசிரியர் “ஆறு அழகப்பன்” வகுத்த பத்து வகையான நாடகப் பிரிவுகளில் ஒன்றாக காணப்படுகிறது.
ஓரங்க நாடகத்திற்கான சில உதாரணங்கள்,
- பண்டைய கிரேக்கத்தில் “சைக்ளோப்ஸ்” என்ற ஓரங்க நாடகத்தை யூரிப்பிடிஸ் இயற்றியுள்ளார்.
- “ஆயுத மனிதன்” எனும் ஓரங்க நாடகத்தை ஆங்கில மூலத்தில் ஜார்ஜ் பெர்னாட்ஷா என்பவரும், தமிழாக்க தழுவலில் ஜெயபாரதனும் இயற்றியுள்ளனர்.
ஓரங்க நாடகத்தின் இயல்புகள்
புதிய நாடக வடிவமாக உள்ள ஓரங்க நாடகத்தைச் சிறுகதையுடன் ஒப்பிடலாம். சிறுகதைக்கு வரலாறும், இலக்கணமும் இருப்பது போல் இதற்கும் வரலாறும் இலக்கணமும் சொல்லப்பட வேண்டும்.
நாடகம் நீண்டிருந்தால் எல்லோராலும் மனதை ஒருமுகப்படுத்திக் கவனம் செலுத்த இயலாத காரணத்தால் ஓரங்க நாடகம் தோன்றியது.
ஒரே காட்சி அமையும் கிளைக்கதை இருக்காது. எதிர் இன்ப உணர்ச்சியோ அல்லது துன்ப உணர்ச்சியோ தோன்றும். இன்பம் அல்லது துன்பமாக முடியும். குறுகிய காலத்தில் முடியும்.
சங்ககால இலக்கியமான கலித்தொகையின் பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பை பெற்றுள்ளது. பொதுவாக ஓரங்க நாடகங்கள் ஒற்றைக் காட்சியமைப்பில் நடந்து முடிவதாக அமையும். ஓரங்க நாடகம் அழுத்தம் மிக்கதாகச் சிறப்பானதாகப் பார்வையாளரைச் சென்று சேரும்.
You May Also Like: