தற்காலத்தில் மனித இனத்தின் அதீத முன்னேற்றத்திற்கு பின்னால் ஊடகம் என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது.
ஊடகம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஊடகம் என்பது
- ஊடகத்தின் வகைகள்
- தற்கால ஊடகங்களின் நன்மைகள்
- தற்கால ஊடகங்களின் தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
பண்டைய காலம் தொடக்கம் தற்காலம் வரை ஒரு தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ஊடகம் என்பது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மனிதர்களிடையில் தகவல்களை, கருத்துக்களை கடத்துவது ஊடகம் எனப்படும்.
ஊடகங்கள் மிகவும் விரிவானவை, இது எழுதுவதிலிருந்து ஆரம்பித்து தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் வரை காணப்படுகின்றன. இந்த ஊடகங்களின் வகைகள், அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்பவற்றைப் பற்றி இக்கட்டுரையில் ஆராய்வோம்.
ஊடகத்தின் வகைகள்
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று காணப்படுகின்ற தகவல் பரிமாற்ற ஊடகங்களானவை பல்வேறு வகைகளை கொண்டு காணப்படுகின்றன. அவையாவன,
மரபு வழி ஊடகங்கள்: ஆரம்ப காலத்தில் தகவலை பரிமாற பயன்படுத்திய ஊடகங்கள் மரபுவழி ஊடகங்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றுள் தூது, பறை, தெருக்கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு முதலான தகவல் பரிமாறும் ஊடகங்கள் சிறப்புக்குரியன ஆகும்.
அச்சுவழி ஊடகங்கள்: ஆரம்ப காலத்தில் ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் என்பன தகவல் பரிமாறும் அச்சுவழி ஊடகங்களாக காணப்பட்டன.
தற்காலத்தில் அச்சுவழி ஊடகங்களாக செய்தித்தாள் பருவ இதழ் என்பன காணப்படுகின்றன. பருவ இதழ்கள் வார இதழ், நாளிதழ், மாத இதழ், வாரம் இரு முறை இதழ், காலாண்டு இதழ், அரையாண்டு இதழ், ஆண்டு இதழ் என பல பிரிவுகளைக் கொண்டு காணப்படுகிறது.
மின்வழி ஊடகங்கள்: மின்வழி ஊடகங்கள் அவற்றின் பயன்பாட்டின் நோக்கம் இரண்டு வகைப்படும்.
- கேட்பு நிலை ஊடகம்
கேட்பு நிலை ஊடகங்களாக வானொலி, தொலைபேசி என்பன காணப்படுகின்றன.
- காட்சி ஊடகம்
காட்சி ஊடகங்களாக தொலைக்காட்சி, திரைப்படம் என்பன காணப்படுகின்றன.
மின்னணுவழி ஊடகங்கள்: இன்றைய நிலையில் மின்னணு வழி ஊடகங்களாக, இணைய பயன்பாட்டு வசதிகளை உள்ளடக்கிய கணினிப்பொறிகளையும், திறன்பேசிகளையும் குறிப்பிடலாம்.
தற்கால ஊடகங்களின் நன்மைகள்
தற்கால ஊடகங்களின் நன்மைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். அதாவது, ஊடகங்களானது தொலைதூர தொடர்புகளுக்கு இடையிலான தூரத்தை குறைக்கின்றது,
வெளிநாடுகளில் அல்லது தொலை தூரங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் கல்வியை பெற உதவியாக காணப்படுகிறது, கலாச்சார இடைவெளிகளை குறைக்கின்றது, ஒரு தகவல் சென்றடைதல் அல்லது பெறுதல் என்பவற்றிற்கு மூலதன செலவு குறைவாக காணப்படுகிறது,
தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றது, மருத்துவத்துறைகளில் கணினிப்பொறி ஊடகங்களின் பயன்பாட்டினால் நோய்களை உடனடியாக கண்டறியக் கூடியதாகவும் காணப்படுகிறது.
தற்கால ஊடகங்களின் தீமைகள்
ஊடகங்களின் அதிகரித்த பாவனையினால் அருகில் இருப்பவர்களுடன் அல்லது நண்பர்கள், உறவினர்களுடனான நேர்முக சமூகத் தொடர்புகள் குறைவடைகின்றன,
ஊடகங்கள் தொழில்நுட்பம் சார்ந்துள்ளமையால் தொழில்நுட்பத்தில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் சமூக ஊடகத்தளங்கள் தோல்வியடையும்,
இளம் வயதினர் சமூக ஊடகங்களுக்கு அதிகம் அடிமையாகின்றனர், தொழில்நுட்ப ஊடகங்களை கையாள ஆழமான அறிவு தேவைப்படுகின்றது இது போன்ற தீமைகள் தற்கால ஊடகங்களின் பாவனையால் ஏற்படுகின்றன.
முடிவுரை
தகவல் தொடர்பு ஊடகங்களின் மூலமாக பொதுமக்களின் தொடர்பு மிக எளிமையாக மாறிவிட்டது. அதாவது “உள்ளங்கையில் உலகம்” என்ற விதத்தில் காணப்படுகிறது.
சமூகத்தில் ஏற்பட மாற்றங்களுக்கு ஊடகங்களின் தேவை இன்றியமையாததாகும். இருப்பினும் ஊடகங்களின் நன்மை தீமைகளை அறிந்து அவற்றை சரிவர பயன்படுத்திக் கொள்ள பழகிக் கொள்ளுதல் வேண்டும்.
You May Also Like: