உண்மை பேசுதல் கட்டுரை

unmai pesuvom katturai in tamil

மனிதர்களுக்கு காணப்படக்கூடிய குண இயல்புகளில் ஒன்றாகவே உண்மை பேசுதல் காணப்படுகின்றது. ஒரு மனிதனுக்கு உண்மையே உயர்வு தரும் என்ற முதுமொழிக்கு அமைவாக இந்த உலகில் வாழக்கூடிய நாம் அனைவரும் உண்மை உரைப்பதனைக் கைக்கொள்ள வேண்டும்.

உண்மை பேசுதல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உண்மையின் சிறப்புக்கள்
  3. உண்மை உயர்வு தரும்
  4. திருவள்ளுவரின் கருத்து
  5. உண்மையால் உயர்ந்தவர்கள்
  6. முடிவுரை

முன்னுரை

தற்கால உலகினில் அரிதான குணங்களில் ஒன்றாகவே இந்த உண்மை உரைத்தல் காணப்படுகிறது. அதாவது அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவரும் பொய்களை கூறி தப்பித்துக் கொள்வதனை காண முடிகின்றது.

ஆனால் “வாய்மையே வெல்லும்” என்பதற்கு இணங்க உண்மை எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும் அதுவே எமக்கு நன்மை பயக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையின் சிறப்புக்கள்

நாம் சக மனிதர்களுடன் உரையாடும் போது பொய்கள் ஏதும் பேசாது, உள்ளதை உள்ளபடியே உரைப்பது உண்மை எனப்படுகின்றது.

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே இறுதியில் வெல்லும்”என தர்மத்தினை கடைப்பிடித்த கடினமான ஒரு காரியமாக இருந்த போதும், அதனால் பல கெடுதல்கள் வந்தாலும் இறுதியில் தர்மம் அதாவது உண்மையே வெல்லும் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உண்மைகளை உரைக்கும் ஒருவன் தவம், தானம் செய்தோரை விடவும் சிறந்தவன் ஆவான் என்று கருத்துக்களின் ஊடாக உண்மையின் சிறப்பு எடுத்துக்காட்டப்படுகின்றது.

உண்மை உயர்வு தரும்

நன்மை பயக்கும் ஓர் செயல்பாடாகவே உண்மை உரைத்தல் காணப்படுகின்றது. அதாவது ஒருவனுக்கு மன வலிமை ஊட்டுவதாகவும், தைரியம் ஊட்டுவதாகவும், உயர்வை எட்ட உதவுவதாகவும் இந்த உண்மை காணப்படுகின்றது.

ஒருவன் பொய் உரைப்பானாக இருந்தால் அந்த பொய்யை நிரூபிப்பதற்காகவே மீண்டும் மீண்டும் பல பொய்களை கூறுவான். சமூகத்தில் அவன் பொய்யுரைத்தவன் என நிரூபிக்கப்பட்டால் அவன் கூறும் உண்மைகளை கூட இந்த சமூகம் ஏற்காது.

எனவே ஒருவன் தன்னுடைய குணங்களோடு இந்த உண்மை உரைத்தல் என்ற பண்பையும் வைத்திருப்பானாயின் அவனது வாழ்வில் உயர்வு கிடைக்கும்.

திருவள்ளுவரின் கருத்து

உண்மை பேசுவதன் முக்கியத்தினை வலியுறுத்தும் வகையிலேயே வள்ளுவர் திருக்குறளில் இதற்கான தனியான ஓர் அதிகாரத்தையே அருளியுள்ளார்.

இவரது கருத்துப்படி மற்றவர்களுக்கு தீங்கு தரும் சொற்களை கூட பேசாமல் இருப்பது தான் வாய்மையாகும் என்பதை “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்” என்கிறார்.

“இன்னா செய்தாரை தெய்வம் இருக்கு வாய்மை உடையார் தெய்வம் காக்கும்” என்பதன் ஊடாக உண்மை பேசுபவரை தெய்வம் காக்கும், பொய் உரைப்பவர்களை தெய்வம் நிந்திக்கும் என வாய்மையின் சிறப்பை குறிப்பிடுகின்றார்.

மேலும் “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைதொன்றும் வாய்மையின் நல்ல பிற” என்பதனூடாக வாய்மையை விட சிறந்த வேறு எதுவும் இல்லை என அறங்களுள் சிறந்ததும், நிலையானதுமான உண்மையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

உண்மையால் உயர்ந்தவர்கள்

எமது வாழ்க்கை வரலாற்றில் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் உண்மையாயினால் உயர்ந்த பலர் காணப்படுகின்றனர் அவற்றுள் முக்கியமான சிலரை நோக்கலாம்.

அந்த வகையில் தன்னுடைய மனைவி, மக்கள், பட்டம், பதவி என அனைத்தையும் இழந்து சுடுகாட்டுக்கு காவலனாய் வாழும் நிலை ஏற்பட்டாலும், அந்த நிலையிலும் பொய்யை கூற மறுத்து அழியா புகழ் பெற்ற அரிச்சந்திரன், வில்லுக்கு விசயன் சொல்லுக்கு அரிச்சந்திரன் என உண்மை உரைத்தமையால் இன்று வரைக்கும் போற்றப்படுகின்றார்.

வாய்மையே வெல்லும் என அறவழியில் போராடி ஆங்கிலேயரிடமிருந்து எமது நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த மகாத்மா காந்தி மற்றும் மக்களால் இன்று வரைக்கும் நேர்மையான மனிதராக போற்றப்படும் காமராஜர் போன்றோரைக் குறிப்பிடலாம்.

முடிவுரை

இந்த உலகில் சுயநலம் அற்றவர்களாய் உண்மையாலும், நேர்மையாலும் உயர்ந்தால் மக்கள் மனதில் நீங்காத இடம் கிடைக்கும். எனவே “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதற்கு இணங்க உண்மைதான் எம்மைக் காக்கும் அதுதான் எம்மை வாழவைக்கும் என்பதனை உணர்ந்து உண்மையானவர்களாய் வாழ்வோமாக.

You May Also Like:

ஒன்றே குலம் ஒருவனே தேவன் கட்டுரை

பருவ காலங்கள் கட்டுரை