இந்த வையகத்தில் வாழும் மனிதர்கள் பல்வேறு பண்புகளை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். எமது வாழ்வானது இன்பமும், துன்பமும் கலந்து காணப்படுவது போலவே பேசும் பேச்சிலும் இன்சொல், வன்சொல் என்பனவும் காணப்படவே செய்கின்றன.
இன்சொல் பேசுதல் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இன்சொல் என்றால் என்ன
- திருவள்ளுவரின் கருத்து
- இன்சொல்லின் பயன்கள்
- வன்சொல்லினால் ஏற்படும் பாதிப்புகள்
- முடிவுரை
முன்னுரை
மனிதர்களின் ஒலியினால் எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் உயிர் கொடுக்கப்படுகின்றன. அவ்வாறாக ஒலிக்கும் சொற்கள் இனிமை தருவதுமுண்டு, இன்னாமை தருவதுமுண்டு.
அது அவரவர் பயன்படுத்தும் சொற்பிரயோகங்களிலே அமைந்துள்ளது. ஆனால் நாம் பிறர் பேசும் போது இனிமை பயக்கும் இன்சொற்களையே பேச வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறோம்.
இன்சொல் என்றால் என்ன
மனிதர்கள் கைக்கொள்ளக் கூடிய மிக உயர்ந்த அறநெறி ஒன்றாகவே இந்த இன்சொல் காணப்படுகின்றது.
அதாவது ஒரு நபர் பேசும் போது இனியவற்றையும், அன்பு கலந்தவற்றையும், வாய்மையானவற்றையும் மற்றும் வஞ்சனை அற்றவற்றைவயும் உரையாடுவாராயின் அதுவே இன்சொல் எனப்படுகின்றது.
திருவள்ளுவரின் கருத்து
இன்சொல் பேசுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலேயே திருவள்ளுவர் “இனியவை கூறல்” என்ற அதிகாரத்தை உருவாக்கியுள்ளார். இதில் வள்ளுவர் இன்சொல் பற்றி கூறும் ஒரு சில குறள்களை அவதானிப்போம்.
“அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெரின்” என்பதனூடாக அடுத்தவர்களுக்கு பொருட்களை வழங்கித் தான் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று இல்லை அவர்களிடம் இனிமையாக பேசினாலே போதும் என்கின்றார்.
“முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி மகத்தானாம் இன்சொ லினதே அறம்” என்பதனூடாக முகம் மகிழ்ந்து அகத்தின் ஊடாக இனிமையான சொற்களை பேசுவதே அறமாகும் என்கின்றார்.
“இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்தற்று” என்பதன் மூலம் இனிமையான சொற்கள் இருக்கும் பொழுது அதனை பேசாமல் வன்மையாக சொற்களை பேசுதல் என்பது ஒரு மரத்தில் உண்பதற்கு சிறந்த பழங்கள் இருந்தும் அதனை விட்டுவிட்டு காய்களை உண்பதற்கு சமமானதாகும் என குறிப்பிடுகின்றார்.
இவ்வாறாக திருக்குறள்களின் மூலம் இன்சொல் பேசுவதன் அவசியத்தை வள்ளுவர் அறிவுறுத்துவதைக் காணலாம்.
இன்சொல்லின் பயன்கள்
இன்முகத்துடன் இனிமையாக பேசும் சொற்களில் பயன்கள் அதிகமாகவே காணப்படும்.
அதாவது இன் சொற்களானது கேட்பதற்கு மகிழ்ச்சியானதாகவும், உறவுகளை வலுப்படுத்தக் கூடியதாகவும், நன்நடத்தைகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும், நல்லெண்ணத்தையும் மதிப்பினையும் பெற்றுத் தரக்கூடிய ஒன்றாகவும் காணப்படுகின்றது.
எனவே இன்சொல் பேசுவதன் மூலம் மற்றவர்களின் முன்னிலையில் நாம் மதிப்பினையும், சிறந்த ஒரு கௌரவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
வன்சொல்லினால் ஏற்படும் பாதிப்புகள்
வன்சொற்களினால் அதனை பேசியவர், அதனை கேட்டவர் ஆகிய இருவரும் இருபாலருக்கும் துன்பம் கிட்டும்.
அதாவது வன்சொல் பேசியவர் தான் அவ்வாறு பேசி விட்டோமே என பின்னர் வருந்துபவராகவும் அதனை கேட்டவர் உடனே மனம் உடைந்து போவதற்கு காரணமாகவும் இந்த வன்சொல் அமையும்.
மேலும் வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்குவதாகவும் மற்றவர்கள் முன்னிலையில் மரியாதையை இழக்கச் செய்வதாகவும், மதிப்பை குறைப்பதாகவுமே இந்த வன்சொல்கள் காணப்படும்.
முடிவுரை
“தீயினால் சுட்ட புண் ஆறிவிடும் நாவினால் சுட்ட புண் ஆறாது” என்ற வாசகங்களுக்கு அமைவாக நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் அவதானமாகவே பேச வேண்டி உள்ளது.
ஆகவே மற்றவர்களை காயப்படுத்தும் கொடிய வன்சொல்லை பேசுவதை தவிர்ந்து, மற்றவர்களையும் மகிழ்வூட்டக்கூடிய இன் சொல்லையே நாம் பேச வேண்டும்.
You May Also Like: