ஆறுவது சினம் கட்டுரை

aaruvathu sinam katturai in tamil

மனித உணர்ச்சிகளில் ஒன்றான சினம் என்பது ஒரு மனிதனை நல்வழிப்படுத்தவும் தீய வழியில் இட்டு செல்லவும் உதவுகிறது. சினத்தின் தன்மைகளை அறிந்து ஒரு மனிதன் அதனை கட்டுப்படுத்தி வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

ஆறுவது சினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சினம் பற்றி அறிஞர்களின் கூற்று
  3. சினத்தினால் ஏற்படும் தனிநபர் விளைவுகள்
  4. சினத்தினால் ஏற்படும் சமூக விளைவுகள்
  5. சினத்தை கட்டுப்படுத்தும் முறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

மானிடரிடையே மாறும் உணர்ச்சிகள், மாறாத உணர்ச்சிகள் என இரண்டு விதமான உணர்ச்சிகள் காணப்படுகின்றன.

அவற்றுள் மாறாத உணர்ச்சிகளாக துவேஷம், காதல், பொறாமை, காமம் என்பனவும் மாறும் உணர்ச்சியாக சினமும் காணப்படுகிறது.

அதாவது, கோபம் என்பது நீண்ட காலம் நீடிக்கும் உணர்ச்சி அல்ல. அவை வெறுமனே சில வினாடிகள், நிமிடங்கள், மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் உணர்ச்சி ஆகும்.

சினம் கொள்ளும் போது ஒருவர் தனது நிதானத்தை இழந்து அவர்களது முகபாவணை, உடல்மொழி, குரலின் தன்மை, பேசும் விதம் என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதீத சீற்றமானது பஞ்சமாபாதங்களுக்கு நிகரானது ஆகும்.

சினம் பற்றி அறிஞர்களின் கூற்று

சினத்தைப் பற்றி திருவள்ளுவர் திருக்குறளில் வெகுளாமை என்ற அதிகாரத்தில் பத்து குறட்பாக்களின் ஊடாக  விரிவாக கூறுகிறார். அவற்றில் இரண்டு குறட்பாக்களை நோக்குவோம்.

“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லும் சினம்”

அதாவது இந்த உலகினிலே ஒருவன் வாழ வேண்டுமெனில், சினத்தை ஒழிக்க வேண்டும்.  அவ்வாறில்லையேனில்,  சினம் அவனை அழித்துவிடும் என்று கூறுகின்றார். அத்துடன்

“சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையா தற்று”

அதாவது சினத்தை தன் வலிமையாக கொண்டவன் ஒருவன் தனது கையால் தரையில் ஓங்கி அறைந்தால் எவ்வளவு வலிக்குமோ, அதுபோல அடுத்தவர் மீது நாம் கொண்ட கோபம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்.

தத்துவஞானி பிளேட்டோ அவர்கள் “இறைவன் எப்போதும் நம்மை கண்காணித்து கொண்டே இருக்கின்றான் என்ற உணர்வு நம்மிடம் இருந்தால் பிறர் மீது சினம் கொள்ளாமல் இருப்போம்.” என்று சினம் பற்றி கூறுகிறார்.

அத்தோடு நபிகள் நாயகம் ” வீரம் என்பது அதுவல்ல, யார் ஒருவன் கோபத்தில் தன்னை கட்டுப்படுத்தி அமைதியாக கோபத்துக்கு தன்னை ஆட்படுத்தாமல் இருக்கிறார்களோ அவர்களே மாவீரன்.” என்று கூறுகின்றார்.

ஔவையார் ஆத்திச்சூடியில் “ஆறுவது சினம்” என்று கூறுகின்றார்.

சினத்தினால் ஏற்படும் தனிநபர் விளைவுகள்

அதிகம் சினம் கொள்பவர்கள் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். உயிர் இரத்த அழுத்தம் போன்றவையும் ஏற்படுகிறது.

அதீத சினத்திற்கு உட்படும் மனிதர்கள் எப்போதும் விடயங்களை சரிவர விளங்கிக் கொள்ள முடியாமல் சினம் அவர்களின் மூளையை மழுங்கடித்திருக்கும். இதனால் அவர்கள் பேசுகின்ற வார்த்தைகளும், செய்கின்ற செயல்களும் பல நேரங்களில் தவறான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

சினத்தினால் ஏற்படும் சமூக விளைவுகள்

அதிக சினம் கொள்வதினால் தனிப்பட்ட ரீதியில் மாத்திரமின்றி, அவர் வாழும் சமூகத்திலும் பல வகையான விளைவுகள் ஏற்படுகின்றன.

ஒருவர் அதிக சினம் கொள்பவராக காணப்பட்டால், அவர் வாழும் சமூகத்தில் மக்களிடையே சண்டைகளும், மனக்கசப்புகளும், ஒற்றுமையின்மையும் அதிகமாக உருவாகின்றன.

அதுமட்டுமல்லாது பாரிய கலவரங்களும், போராட்டங்களும், உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் காணப்படும்.

சினத்தை கட்டுப்படுத்தும் முறைகள்

சினத்தை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வகையான வழிகள் காணப்படுகின்றன. அதிக சினத்திற்கு உள்ளாகுபவர்கள் யோகா பயிற்சி மற்றும் தியான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

சினம் கொள்ளும் போது இரண்டு நிமிடம் மூச்சு வயிற்று செய்வதன் மூலம் சினம் கட்டுப்பாட்டுக்குள் வரும் அத்துடன் சினத்தை ஏற்படுத்தும் விடயங்களை விட்டு விலகுதல், மனதுக்கு அமைதி தரும் விடயங்களை செய்தல், எண்களை தலைகீழாக எண்ணுதல் போன்ற செயற்பாடுகளும் சினத்தை கட்டுப்படுத்தும்.

முடிவுரை

சினம் கொள்வது என்பது எந்த ஒரு விடயத்திற்கும் சரியான முடிவாக அமையாது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். சினம் கொள்வதனால் சிறந்த நட்புக்களும் நம்மை விட்டு நீங்குகிறது.

ஒரு மனிதன் சினம் கொள்ளாத காணப்படுவதும் தவறாகும். எந்தெந்த விடயங்களுக்கு சினம் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவதன் மூலம் சமூகத்தில் சிறந்த முறையில் அனைவருடனும் ஒற்றுமையாக வாழலாம்.

You May Also Like:

வள்ளுவம் வலியுறுத்தும் ஒழுக்கம் கட்டுரை

நடைப்பயிற்சி நன்மைகள் கட்டுரை