அறிவியல் அற்புதங்கள் கட்டுரை

ariviyal arputhangal katturai in tamil

நாம் வாழும் உலகில் மனிதனின் வளர்ச்சி இந்த அறிவியல் வளர்ச்சியோடு இணைந்து பயணிக்கின்றது. ஆகவே அறிவியலின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. இந்த அறிவியலினால் பல்வேறு சாதனைகளும் அற்புதங்களும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

அறிவியல் அற்புதங்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அறிவியலின் தோற்றம்
  3. அறிவியலின் வளர்ச்சி
  4. அறிவியலின் பயன்பாடு
  5. நவீன யுகமும் அறிவியலும்
  6. முடிவுரை

முன்னுரை

அறிவியல் என்பது எமது வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அனைவரும் அறிவியலையும் அதன் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம்.

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியலின் துணையானது எமது அன்றாட வாழ்வினை வளமாக்குவதாகவும், நலமாக்குவதாகவும் அமைகின்றது. மருத்துவம், வானவியல், போக்குவரத்து, தொழில்நுட்பவியல் போன்ற அனைத்து துறைகளிலும் இந்த அறிவியலின் அற்புதங்கள் நிகழ்ந்தேறிய வண்ணமே உள்ளன.

அறிவியலின் தோற்றம்

மனித யுகத்தில் கற்காலத்தில் மனிதன் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இரு கற்களை உரசுவதன் மூலம் தீப்பொறியை கண்டுபிடித்ததன் பிற்பாடு அவனது அறிவியல் கண்டுபிடிப்புகளின் பட்டியல் உலோகங்கள், ஏர், சக்கரங்கள் என நீண்டு கொண்டே சென்றன.

இவ்வாறாக மனிதன் தன்னுடைய வாழ்க்கையினை இலகுபடுத்துவதற்காக எப்போது பொருட்களை கண்டுபிடிக்க துவங்கினானோ அப்பொழுதே இந்த அறிவியலும் தோற்றம் பெற்றது என குறிப்பிடலாம்.

அறிவியலின் வளர்ச்சி

மூடநம்பிக்கைகளில் மூழ்கி போன மனித சமூகத்தை மீட்டெடுப்பதற்காக சுமார் 17ம் நூற்றாண்டிலேயே நவீன அறிவியலானது தோற்றம் கண்டது.

அதாவது ஆக்கிமிடிஸ், சோக்ரடீஸ், அலெக்சாண்டர் மற்றும் கலிலியோ கலிலி போன்ற சில அறிவியலாளர்கள், இயற்கை மற்றும் ஏனைய பொருட்களின் தோற்றத்தில் உள்ள அறிவியலை இந்த உலகுக்கு எடுத்துக் கூறியவர்களாவார்கள்.

இவர்களுடைய கண்டுபிடிப்புகளே இன்றைய நவீன விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாகவும் உள்ளது. அதாவது மின் காந்தவியல், அணு இயக்கவியல் போன்றவற்றினை பயன்படுத்தி இன்று அறிவியலானது உச்சநிலையை தொட்டுள்ளது.

விண்கலங்களை உருவாக்குதல், ஏனைய கோள்களைப் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்றன அறிவியலின் பிரம்மாண்ட வளர்ச்சியே எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் தற்காலத்தில் நாம் உபயோகிக்கின்ற சமையலறை உபகரணங்கள் உட்பட எமது போக்குவரத்து சாதனங்கள் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள் போன்ற அனைத்துமே அறிவியலின் வளர்ச்சியே எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன.

அறிவியலின் பயன்பாடு

எமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இந்த அறிவியலையும் அதன் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்திய வண்ணமே உள்ளோம்.

இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அல்லது சாதனங்கள் எமது நேரத்தை மீதப்படுத்துவதாகவும், எமது வேலைகளை இலகுபடுத்துவதாகவும் காணப்படுகின்றன. இன்று எமது சமையல் உபகரணங்கள் அனைத்துமே அந்த அறிவியலின் மூலம் நாம் பெற்ற பயன்களாகவே காணப்படுகின்றன.

அவை எமது வேலைகளை இலகு படுத்துவதாக காணப்படுகின்றன. இவற்றை இயக்கும் மின்சாரத்தை இந்த உலகிற்கு அளித்ததும் அறிவியலே. மனிதன் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்வதற்கு பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து சாதனங்கள் அனைத்தும் அறிவியலின் மூலம் கிடைத்த பயன்களாகவே கொள்ளலாம்.

மருத்துவத்துறையில் பயன்படுத்தக்கூடிய நவீன கருவிகள் மற்றும் விவசாய துறை, நீர்ப்பாசன துறை, அழகியல் துறை போன்ற துறைகளிலும் பயன்படுத்தக்கூடிய உபகரணங்களும் இந்த அறிவியல் எமக்களித்த பயன்களாகவே காணப்படுகின்றன.

நவீன யுகமும் அறிவியலும்

இன்று உலகம் உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. அதாவது உலகில் நடக்கக்கூடிய எல்லா விடயங்களையும் ஓர் இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள முடிகின்றது.

எனவே நவீன யுகத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணை இன்றி எந்த ஒரு மனிதனாலும் வாழவே முடியாது, எனும் அளவுக்கு மனிதன் அதன் அடிமையாகி விட்டான்.

ஒருநாள் மின்சாரம் இல்லையெனில் அந்த நாளை வீணான நாள் என கருதும் அளவுக்கு ஆகிவிட்டது.

இன்னும் மனிதன் இந்த நவீன யுகத்தில் பூமியை விட்டு விண்வெளியில் உள்ள வேற்று கிரகங்களில் வாழ்வதற்கான ஆய்வுகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதனை காண முடியும்.

இவ்வாறாக நவீன யுகத்தில் அறிவியலானது எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தினை அடைந்துள்ளது என குறிப்பிடலாம்.

முடிவுரை

தொழில்நுட்பத்தால் கட்டியமைக்கப்பட்ட இந்த நவீன உலகானது அறிவியலினையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. இன்று தொலைத்தொடர்பு, வானவியல் ஆய்வுகள், வணிக நடவடிக்கைகள் போன்ற அனைத்துமே அறிவியலின் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஆகும்.

அதேபோன்று அணு ஆயுத உருவாக்கம், சூழலை மாசுபடுத்தக்கூடிய இயந்திரங்களின் உருவாக்கம் போன்ற உலகினை பாதிக்கக்கூடிய கண்டுபிடிப்புகள் அறிவியலின் தீமையாக காணப்படுகின்றன.

எனவே நன்மை, தீமை ஆகிய இரண்டு பக்கங்களையும் கொண்டுள்ள இந்த அறிவியலின் அற்புதங்களை நாம் சரியான முறையில் உபயோகிக்க வேண்டும்.

You May Also Like:

அறிவியல் அழிவு கட்டுரை

போதை அழிவின் பாதை கட்டுரை