வேலுநாச்சியார் வரலாறு கட்டுரை

velunachiyar katturai in tamil

இந்திய நாடானது ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களுள் பெண் விடுதலை வீராங்கனைகளும் காணப்படுகின்றனர்.

வேலுநாச்சியார் வரலாறு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு
  3. திருமணம்
  4. புரட்சிக்கான காரணங்கள்
  5. சிவகங்கையை மீட்க ஐதர் அலி உதவுதல்
  6. சிவகங்கையை மீட்டமை
  7. முடிவுரை

முன்னுரை

வட இந்தியாவில் ஜான்சிராணி லட்சுமிபாய் சுதந்திரப் போராட்டத்தில் முதல் முகமாக முன்னிறுத்தப்படுகின்றார்கள்.

ஆனால் அவருக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர் நிலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்திய வரலாற்று பெருமைக்குரியவரே வேலுநாச்சியார் ஆவார்.

இந்தியாவில் முதல் சுதந்திரக் குரலாக ஒலித்தது பூலித்தேவனின் குரலே ஆகும். அவருக்கு பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்த வீரமங்கை வேலுநாச்சியாரது குரலே ஆகும். இவரை பற்றி இக்கட்டுரையில் நோக்குவோம்.

பிறப்பு

வேலுநாச்சியார் அம்மை, இராமநாதபுர சேதுபதியான செல்லமுத்து தேவருக்கும் முத்தாத்தாள் நாச்சியாருக்கும் 1730 ஆம் ஆண்டு பிறந்தார்.

அரசுரிமைக்கு ஆண் குழந்தை தான் வாரிசாக காணப்பட இயலும் ஆதலால் அரசர்கள் பெரும்பாலும் ஆண் வாரிசையை எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் செல்லமுத்து தேவருக்கோ பிறந்தது பெண் குழந்தை என்று அவர் மனம் களங்கம் அடையாது வளரும் மகளுக்கு குதிரை ஏற்றம், வாள் வீச்சு, சிலம்பம், வளரி போன்ற ஆயுதத்தை கையாளலும் முறைகளையும் போர் பயிற்சிகள் என்பவற்றையும் கற்றுக் கொடுத்தார்.

இவை அனைத்திலும் நாச்சியார் சிறப்பு தேர்ச்சி பெற்று விளங்கினார். அதுமட்டுமல்லாது தாய் மொழியான தமிழ் மொழி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் என ஆறு மொழிகளிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றவராகவும் காணப்பட்டார்.

திருமணம்

வேலுநாச்சியாரின் சிறு வயதில் சிவகங்கை சீமையை ஆட்சி செய்த முத்துவடுக நாதருக்கும், வேலுநாச்சியாருக்கும் திருமணம் நடந்தது.

முத்துவடுகநாதருக்கு வேலுநாச்சியாரின் போர் செயல்கள் பிடித்திருந்தமையினால் வேலுநாச்சியாரின் கீழ்  2000 படை வீரர்களை பிரித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கொடுத்தார். திருமணம் நடந்தாலும் அவர் சிறு வயதிலேயே ஒரு படைக்கு தளபதியாக திகழ்ந்தார்.

புரட்சிக்கான காரணங்கள்

1772 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் சிவகங்கை சீமையின் மீது படையெடுத்தனர். அதாவது  காளையார் கோவிலில் இரவுப் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஆங்கிலேய படையினர் எவ்வித அறிவித்தலும் இன்றி போர்த் தொடுத்தனர். முத்துவடுகநாதர் ஆங்கில படையுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தார்.

இப்போரிலிருந்து தப்பிய வேலுநாச்சியார் சிவகங்கை மீட்க, திண்டுக்கல் கோட்டையில் தலைமறைவாக தங்கியிருந்து சின்னமருது, பெரியமருது ஆகியோரின் துணையுடன் படை வீரர்களை திரட்டி அவர்களுக்கு பயிற்சிகள் அளித்தார்.

சிவகங்கையை மீட்க ஐதர் அலி உதவுதல்

வேலுநாச்சியார் மாறுவேடத்தில் சென்று மைசூர் மன்னர் ஐதர்அலியை சந்தித்து, உருது மொழியில் ஆங்கிலேயர்களை எதிர்ப்பது பற்றி கலந்துரையாடினார்.

மாறுவேடத்தில் எவ்வித துணையுமின்றி தன்னை தேடி வந்த இராணியின் துணிவையும், அவர் உருதுமொழியில் பேசியதையும் கண்டு வியந்த ஐதர் அலி இராணி வேலுநாச்சியாருக்கு படை வீரர்களை கொடுத்தும், அவருக்கு போர் செய்வதில் உறுதுணையாக நின்றும் உதவி புரிவதாக உறுதி அளித்தார்.

சிவகங்கையை மீட்டமை

ஐதர் அலி ஐயாயிரம் குதிரைப்படை வீரர்களை வேலுநாச்சியாருக்கு உதவ அனுப்பி வைத்தார். அப்படை வீரர்களுடன் மருது சகோதரர்களின் தலைமையில் புறப்பட்ட வேலிநாச்சியார் படை முதலில் காளையார்க்கோவிலை மீட்டது.

வேலுநாச்சியாரின் படை தளபதிகளில் ஒருவரான குயிலி, ஆங்கிலேய படைகளின் வெடிமருந்து கிடங்கை தற்கொலை படை தாக்குதல் மூலம் சிதறடித்தார். இதன் மூலம் ஆங்கிலேயப்படை வேலுநாச்சியாரின் பாதம் பணிந்தது.

பின்னர் சிவகங்கையை மீட்டு ஆட்சி புரிந்த போது சின்ன மருதுவை நாட்டின் முதலமைச்சராக பணிபுரிவதற்கும் பெரியமருது நாட்டின் தலைமைத்தளபதியாக பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்னர் தனது கணவரைத் தொடர்ந்து 1789 வரை சிவகங்கையை சிறப்புற ஆட்சி செய்தார்.

முடிவுரை

இன்று நாம் சுதந்திரத்தை அனுபவிக்க காரணமாக அமைந்த பலருள் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய முதல் பெண்மணியான வேலுநாச்சியாரை எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.

இவ்வாறான பெண் தலைவர்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொண்டு பெண் அடக்குமுறையை கலைதல் வேண்டும்.

You May Also Like:

தமிழ் நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள் கட்டுரை

சங்க இலக்கியத்தின் சிறப்புகள் கட்டுரை