நவீன விவசாயம் பற்றிய கட்டுரை

naveena vivasayam in tamil katturai

இதுவரை விளம்பரம் செய்யாத ஒரே தொழில் விவசாயம் மட்டும் தான். ஏனென்றால் விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல உயிரின் ஆதாரம் ஆகும்.

நவீன விவசாயம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. விவசாயம் என்பது
  3. விவசாயத்தின் முக்கியத்துவம்
  4. நவீன விவசாயம் என்பது
  5. நவீன விவசாயத்தின் நன்மை, தீமை
  6. முடிவுரை

முன்னுரை

“படைத்தவன் மட்டுமே இறைவன் அல்ல. மற்றவர் பசிக்காக உழைப்பவனும் இறைவன் தான்” என்ற கூற்றுக்கு இணங்க உலகில் வாழுகின்ற அனைத்து மக்களின் அன்றாட உணவுக்கு விவசாயம் என்பது இன்றியமையாத ஒரு தொழிலாக காணப்படுகிறது.

விவசாயமானது பண்டைய காலம் தொடக்கம் இன்று வரை வளர்ச்சி அடைந்து வருகின்ற ஒரு பாரம்பரியமாகும். இது ஒரு நாட்டினுடைய முதுகெலும்பாக காணப்படுகின்றது.

விவசாயம் என்பது உணவு உற்பத்திக்கு மாத்திரம் அல்லாமல் அது சார்ந்த தொழிலுக்கும் உதவுகிறது. இக்கட்டுறையில் விவசாயம் என்பது, அதன் முக்கியத்துவம், நவீன விவசாயம் என்பது யாது? அதன் நன்மை தீமைகள் பற்றி ஆராய்வோம்.

விவசாயம் என்பது

விவசாயம் அல்லது உழவுத் தொழில் என்பது விளைநிலங்களில் உணவுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் தானியங்கள், பயிர்கள் என்பவற்றை உற்பத்தி செய்தல் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பவற்றை குறித்து நிற்கிறது. விவசாயம் என்பது ஓர் முதல் நிலை தொழிலாகும்.

இந்த விவசாய முறைமையில் மனிதன் இயற்கையில் இருந்து பொருட்களை உற்பத்தி செய்து அதன் மீது கழிவுகளை இயற்கைக்கு உரமாக அளிக்கின்றான்.

விவசாயத்தின் முக்கியத்துவம்

இந்த பூமியில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு என்பது அன்றாட தேவையாக காணப்படுகிறது. அவை இயற்கையில் இருந்து விவசாயத்தின் மூலமே கிடைக்கிறது.

உடலுக்கு தீங்கற்ற உணவுகளை உற்பத்தி செய்ய விவசாயம் உதவுகிறது. மற்றும் ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் வளர்ச்சியில்  விவசாயம் என்பது முக்கிய பங்கினை வகிக்கிறது.

உதாரணமாக, உலகின் அதிக சனத்தையை கொண்ட சீன நாட்டை எடுத்துக் கொண்டால், இது விவசாயத்தில் முதன்மையான நாடாக காணப்படுகிறது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் பல லட்சம் கோடி ரூபாய் விவசாய நடவடிக்கைகளின் மூலமாக மாத்திரமே கிடைக்கிறது.

நவீன விவசாயம் என்பது

பண்டையக்காலத்தில் நதிக்கரைகளை அடிப்படையாக கொண்டு, எருதுகளில் ஏர்க்கலப்பை பூட்டி, இயற்கையான முறையில் மண்ணை பண்படுத்தி விலங்குகளின் கழிவுகள், தாவரக்கழிவுகள் என்பவற்றை  இயற்கை உரமாக்கி பயிர்களை உற்பத்தி செய்த முறைமைக்கு பதிலாக,

இயந்திரங்களின் உதவியினால் விளைநிலத்தை பண்படுத்தி நவீன தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட உரம், கிருமி நாசினிகளை பயன்படுத்தி நவீன பயிர்விதைகளை உற்பத்தி செய்து அவற்றை அறுவடை செய்வதற்கும் இயந்திரங்களை பயன்படுத்துதல் நவீன விவசாயம் என அழைக்கப்படுகிறது.

கைத்தொழில் புரட்சியின் பின்பு, உலகில் அதிகரித்து வருகின்ற சனத்தொகைக்கு ஏற்ப விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் இம்முறைமை ஆரம்பிக்கப்பட்டது.

நவீன விவசாயத்தின் நன்மை, தீமை

நவீன விவசாய முறைமையின் நன்மைகளாக குறைவான காலத்தில் அதிக விளைச்சல் பெறல், பணியாட்களின் தேவை  குறைவு, சிக்கனமான நீர் பாய்ச்சல் முறை, குறைவான நேரத்தில் அதிகப்படியான வேலையை செய்ய முடிகின்றமை போன்றன காணப்படுகின்றன.

இவ்வாறு பல நன்மைகள் காணப்பட்டாலும் நவீன விவசாயம் முறைமையினால்  பல தீமைகள் ஏற்படுகின்றன.

குறுகிய காலத்தில் அதிக விளைச்சலை பெறும் நோக்கில் அதிகப்படியான இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றமையினால் மனிதனுக்கு உடல்சார் நோய்கள், தோல்சார் நோய்கள் ஏற்படுகின்றன.

கிருமிநாசினி பாவித்த நீர், நீர்நிலைகளில் போய் சேர்வதனால் நீர்நிலைகள் நஞ்சாகிறது அத்துடன் விளைநிலங்கள் வளமிழக்கின்றன. இவ்வாறு பல நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன.

முடிவுரை

“இளம் விஞ்ஞானியை விடவும் இளம் விவசாயி தான் நம் நாட்டுக்கு தேவை” ஒரு நாட்டினுடைய முதுகெலும்பாக காணப்படுகின்ற விவசாயமானது அனைவராலும் மதிக்கப்பட்டு பேணப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது.

பண்டைய காலத்தில் காணப்பட்ட இயற்கை விவசாயமானது வளர்ச்சி கண்டு தற்போது நவீன விவசாயமாக காணப்படுகிறது.

நவீன விவசாயம் முறைமை அதிகரித்த வருகின்ற சனத்தொகைக்கு உணவளிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டாலும், அவற்றின் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படுவதனால் அம்முறையை குறைத்து நம் முன்னோர்களின் இயற்கை விவசாய முறைமையை கையாள்வது சிறப்பாக இருக்கும்.

You May Also Like:

விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை

விவசாயம் பற்றிய கட்டுரை