தைப்பூசம் பற்றிய கட்டுரை

thaipusam katturai in tamil

தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

தைப்பூசம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தைப்பூசம் என்பது
  • தைப்பூச வரலாறு
  • தைப்பூசத் திருநாளின் சிறப்பு
  • தைப்பூச பற்றி கூறும் பதிகங்கள்
  • முடிவுரை

முன்னுரை

இந்து சமயமானது சைவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம், வைணவம் எனும் ஆறு பிரிவுகளை உடையது ஆகும். இதில் முருகப்பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் கௌமாரமாகும்.

கௌமார பிரிவுக்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு அனுட்டிக்கப்படும் சிறப்பான விரத நாட்களுள் தைப்பூசமும் ஒன்றாக காணப்படுகிறது. இந்த தைப்பூசம் பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் நோக்குவோம்.

தைப்பூசம் என்பது

ஆண்டாண்டு காலமாய் தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாள் தைப்பூசத் திருநாள் என சிறப்பாக அழைக்கப்படுகிறது. மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திரங்களை விட தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்திற்கு சிறப்பான “நட்சத்திர அந்தஸ்து” உண்டு.

தைப்பூச வரலாறு

நவகிரகங்களின் அதிபதியான சூரியன் சிவ அம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தை தன் வடதிசை பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்திராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகர ராசியில் இருக்கின்றார்.

சக்தியின் அம்சமாக திகழ்ந்தவர் சந்திரன், தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடக ராசிக்கு சஞ்சரிக்கின்றார். அன்றைய நாளில் மகர ராசியில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக் கொள்வர் என்று கூறப்படுகிறது.

இதற்கு அர்த்தம் யாதெனில், அம்பிகை சிவகாமி கண்டு களிக்க பரம்பொருளான சிவன் நடராஜனாக ஆனந்த தாண்டவம் ஆடுவதாகும். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுவதாகவும், தைப்பூச நாளில் சிவ பார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்லப்படுகிறது.

நடனம் ஆடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதை பெறலாம், என்பதனால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். இல்லற வாழ்வில் பெரும் இன்பத்தின் அடையாளம் குழந்தை ஆகும்.

அம்மையப்பரான சிவ பார்வதி மகிழ்ந்திருந்து நமக்களித்த ஞானக்கழந்தை முருகப்பெருமான் ஆவார். அவ்வகையில் பெற்றோருக்குரிய தைப்பூசம் சிவசக்தி சொரூபமான பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூச நாளில் சிவபார்வதி, முருகப்பெருமான் என்பவர்களை தரிசித்து வேண்டிய வரத்தை பெறலாம்.

தைப்பூசத் திருநாளின் சிறப்பு

தைப்பூசம் பல ஆன்மீக அற்புதங்கள் நிறைந்த புண்ணிய தினம் ஆகும். இந்நாளிலே முதல் முதலாக நீரும், அதிலிருந்து உலகமும் தோன்றியதாக புராண நூல்கள் கூறுகின்றன.

சூர பத்மனை அளிக்க முருகப்பெருமானுக்கு ஞான வித்தையும் சொரூபமான வேலாயுதத்தை சக்தி தேவி அழித்ததும் இந்த நாளில் தான் என கூறப்படுகிறது. அத்தோடு, தாமிரபரணியின் கரையில் தவமிருந்த ஸ்ரீ காந்திமதிக்கு நெல்லையப்பர் அருள் பாலித்த திருநாளும் இந்நாளே ஆகும்.

நட்சத்திரங்களின் தலைவனாக புராணங்களில் சொல்லப்படும் வியாழப்பகவான் என்னும் தேவகுருவை இந்நாளில், புனித நீர்நிலைகளில் நீராடி பின்னர் வழிபாடு செய்தல் கல்வி, கேள்வி, ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.

தைப்பூச பற்றி கூறும் பதிகங்கள்

பண்டைய காலத்தில் தமிழகத்தில் தைப்பூசத்தன்று புனித நீராடுதல் மிகுந்த பத்து உணர்வோடு கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது. “பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே” என்று தைப்பூசத்திருநாள் அன்று நீராடுவது பற்றி அப்பர் பெருமானது பாடல் கூறுகிறது.

மயிலையில் தைப்பூச விழா கொண்டாடியது பற்றியும் அப்போது அன்னதானம் செய்தது பற்றியும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில், “மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமலைக்..” (திருமயிலைப் பதிகம், பாடல் எண்.5) கூறப்படுகின்றது.

முடிவுரை

தொழில் காரணமாகவும், வணிகத்தின் பொருட்டும் வெளிநாடுகளுக்கு குடிப்பெயர்ந்து சென்ற தமிழர்கள் முருக வழிபாட்டு நெறியை பின்பற்றுகின்றனர்.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, லண்டன், அமெரிக்கா முதலிய வெளிநாடுகளிலும் தைப்பூச திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சிறப்பு வாய்ந்த தைப்பூசத்திருநாளில் முருகனையும், சிவபார்வதியையும் மனமார வழிபாட்டை நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி நல்வாழ்வு பெற்று வாழ்வோம்.

You May Also Like:

இளமையில் கல்வி கட்டுரை

வள்ளலார் பற்றிய கட்டுரை