உணவை வீணாக்காதீர்கள் கட்டுரை

unavu katturai in tamil

உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே மனிதனும் உணவு இன்றி வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இன்றைய நவீன உலகில் உணவுப் பொருட்கள் அதிகமாக வீணாகுவதை நாம் அனைவரும் காண முடிகின்றது. ஆகவே இவ்வாறான வீண் விரயங்களை தவிர்ப்பது எமது கடமையாகும்.

உணவை வீணாக்காதீர்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உணவின் முக்கியத்துவம்
  • உணவினை வீணாக்கும் இன்றைய உலகம்
  • உணவின்றி ஏற்படும் பசியும், பட்டினியும்
  • உணவு வீணாகுவதை குறைக்கும் வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

உணவை வீணாக்குதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப் பெரியதொரு பிரச்சினையாகும். உலகில் ஒரு பகுதியினரை பசியெனும் பிணி வருத்திக் கொண்டிருக்க, மறுபிரிவினர் உணவை வீணாக்குவதில் மும்மூரமாகவே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே பசி எனும் கொடுமையை புரிந்து கொண்டு, உணவை வீணாக்குவதில் இருந்து நாம் அனைவரும் எம்மை பாதுகாக்க வேண்டும்.

உணவின் முக்கியத்துவம்

நாம் வாழும் உலகில் ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய நிலைபேற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உணவு அடிப்படையானதாகவே காணப்படுகின்றது. “நீர் இன்றி உலகில்லை உணவின்றி உயிர் இல்லை” என கூற முடியும்.

அதாவது உடலின் ஆரோக்கியத்துக்கும், உடலின் இயக்கத்திற்கும் உணவு அவசியமானதாகும். இயற்கையான உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல், உளம் ஆரோக்கியமடைவதனை காண முடியும்.

எனவே இந்த உலகின் உயிரினங்கள் ஒவ்வொன்றும் உயிர் வாழ்வதற்கு உணவு அத்தியாவசியமானது என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது.

உணவினை வீணாக்கும் இன்றைய உலகம்

நாம் வாழும் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டன் உணவு வீணாக்கப்படுகின்றன. என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அமைப்பான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது தெரிவித்துள்ளது.

உணவில் வீணாக்கும் நாடுகளின் வரிசையில் ரஷ்யா முதலிடத்திலும், இந்தியா ஏழாவது இடத்திலும் இருப்பதனை காணலாம். அதாவது இந்தியாவில் மொத்த உற்பத்தியில் 40% வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

இவ்வாறாக நோக்குகையில் உலகில் பல பகுதிகளிலும் இன்று திருவிழாக்கள், பண்டிகைகள், திருமண வைப்பவங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், என பல நிகழ்வுகளிலும் பல்வேறு வகையான உணவு வகைகள் அதிகமாகவே வீணடிக்கப்படுவதனைக் காண முடிகின்றது.

உணவின்றி ஏற்படும் பசியும், பட்டினியும்

உணவின்றி பட்டினியால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை நாம் உலகில் காணலாம். இந்த வகையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் பல மில்லியன் மக்கள் உணவும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல் வாழ்கின்றனர்.

உணவை அதிகமாக வீணாக்குவதன் காரணமாக வறுமை ஏற்பட்டு நாட்டில் பஞ்சமும் பட்டினியும் ஏற்படுகின்றன.

சனத்தொகை அதிகரிப்பு, காலநிலை மாற்றங்கள், மற்றும் நிலங்களின் வளம் குறைவடைதல் போன்றன உணவு உற்பத்தியில் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றமையால் பஞ்சம் ஏற்படுவதற்கு காரணமாகின்றன.

உணவு வீணாகுவதை குறைக்கும் வழிமுறைகள்

உணவை வீணாக்குதல் என்பது அந்த உணவுப் பொருளை மாத்திரம் வீணாக்குவதைக் குறிப்பதல்ல, மாறாக அந்தப் பொருளை உற்பத்தி செய்வதற்கான நீர், நிலம், உழைப்பு, பணம் ஆகிய எல்லாவற்றையும் வீணடிப்பதாகவே கருதப்படுகின்றன.

எனவே புத்திசாலித்தனமாக பொருட்களை வாங்குதல், உணவுப் பொருட்களை சரியான முறையில் சேமித்து வைத்தல், அளவுக்கு அதிகமாக உணவுப் பொருட்கள் வாங்குவதை தவிர்த்தல், வீட்டில் மீதம் ஆகும் உணவுகளை வழக்கும் பிராணிகளுக்கு கொடுத்தல், அதிகமாக உணவுகளை சமைத்து விட்டால் ஏழைகளுக்கு கொடுத்தல்,

மிஞ்சிய உணவுப் பொருட்களைக் கொண்டு உரங்களை தயாரித்தல் மற்றும் பதப்படுத்தக் கூடிய உணவுப் பொருட்களை உரிய முறையில் பதப்படுத்தி பாதுகாத்தல் போன்றன உணவுப் பொருட்களை வீணாக்குவதில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகளாகும்.

முடிவுரை

உலகில் வாழும் குறிப்பிட்ட தொகையினரான பணக்கார வர்க்கத்தினரால் அதிகமாக உணவு வீணடிக்கப்படுகின்றன. அவ்வாறாக உணவுகள் வீணாகுவதன் காரணமாக ஏழை மக்கள் உணவின்றி வாடும் துன்ப நிலை ஏற்படுகின்றது.

எனவே நாம் ஒவ்வொருவரும் உணவின் முக்கியத்துவத்தினை அறிந்து, உணவினை வீணாக்குவதில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியமானதாகும்.

You May Also Like:

உணவு கலப்படம் கட்டுரை

உணவே மருந்து கட்டுரை