ஈர நிலங்கள் என்பன பல்லுயிர் பராமரிப்புக்கான இயற்கை சுற்றுச்சூழல் நிலங்களாகவே காணப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே, ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 2ம் திகதி உலக ஈர நில தினமாக கொண்டாடப்படுகின்றன. எனவே இந்த ஈரநிலங்களை பாதுகாப்பது எம் அனைவருதும் கடமையாகும்.
ஈர நிலங்களின் முக்கியத்துவம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஈர நிலங்கள் என்றால் என்ன
- ஈர நிலங்களின் வகைகள்
- ஈர நிலங்களின் பிரதான தொழிற்பாடுகள்
- ஈர நிலங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
உலகில் காணப்படும் நிலப் பிரதேசங்கள் பல்வேறு தன்மைகளை கொண்டமைந்ததாக காணப்படுகின்றன. இதில் இந்த ஈர நிலங்கள் என்பதும் ஒரு வகையாகும்.
அதாவது சேற்று நிலம் அல்லது சகதி நிலம் என்று மக்களால் அழைக்கப்படக் கூடிய இந்த நிலப்பிரதேசங்கள் தான் சூழலியலாளர்களினால் ஈர நிலங்கள் என பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
ஈர நிலங்கள் என்றால் என்ன
ஈர நிலங்கள் என்பது ஓர் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகவே காணப்படுகின்றன. தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீரினால் மூடப்பட்ட நிலங்களாகும்.
அதாவது சேற்று நிலம், சகதி, முற்றாநிலக்கரி உள்ள நிலம் மற்றும் நீர் நிலைகளுக்கு அண்மையில் உள்ள நிலம் போன்றன ஈரநிலங்கள் எனப்படுகின்றன.
அதாவது அவை தண்ணீரை அல்லது உப்பு நீரை அண்டிய பிரதேசங்களாக காணப்படும்.
சூழலியலாளரான “றிச்சட் கமரோன்” என்பவரின் கருத்துப்படி அரைப்பங்கு வெள்ள நீரும், அரைப்பங்கு கடல் நீரும் வெளிப்படையாக கலக்கும் இடமே ஈரநிலம் எனக் கூறுகின்றார்.
ஈர நிலங்களின் வகைகள்
இயற்கையை பாதுகாப்பதற்கான மிகச்சிறந்த நிலப்பகுதிகளாகவே இந்த ஈரநிலங்கள் காணப்படுகின்றன. இந்த ஈரநிலங்கள் நீரின் வகைகளை அடிப்படையாகக் கொண்டே வேறுபடுகின்றன. அந்த வகையில் ஈரநிலைகளின் வகைகளை பார்ப்போமேயானால்,
கடல் ஈர நிலங்கள் – கடலோரச் சூழலில் காணப்படுகின்ற ஆழமற்ற கடல் நீர் பரப்புகளை கொண்டதாக இவை காணப்படும்.
நதி ஈர நிலம் – ஆறுகள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகாமையில் அமைந்த நன்னீர் கொண்ட ஈர நிலங்களாகும்.
ஏரி ஈர நிலங்கள் – ஏரிகள் மற்றும் தடாகங்கள் போன்றவற்றினால் உருவாக்கம் பெறுவதாகும். பொதுவாக உப்புத்தன்மை கொண்டதாக காணப்படும்.
வெப்ப மண்டல ஈர நிலங்கள் – சிறிய நீரூற்றுக்கள் வெள்ளப்பெருக்கு, சதுப்பு நிலங்கள் போன்றவற்றை கொண்டமைந்த பகுதிகளாகும். இவை இயற்கையாக தோற்றம் கொண்டவையாகும்.
ஈர நிலங்களின் பிரதான தொழிற்பாடுகள்
ஈர நிலங்கள் பொதுவாகவே பல்வேறு தொழில்பாடுகளை மேற்கொள்கின்றன. அதாவது வற்று, பெருக்கு காலங்களிலும், கடல் அலை செயற்பாடுகளின் போதும் கடற்கரை அரிப்பு ஏற்பாடுகளை தவிர்த்தல், காட்டாறுகளாக பெருகிஓடும் ஆறுகளை அடக்கி சமவெளி பிரதேசங்களுக்கு பாயச் செய்தல்,
அதிக மழை கிடைக்கும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் பாதுகாத்தல், மேலும் நீரை தூய்மையாக்குதல் அதாவது மேற்பரப்பு நீரில் கரைந்து வரும் கனியங்களை நீக்கும் ஒரு வடிகட்டியாக இது தொழிற்படுகின்றது.
இதனால் தரைக்குள் நீரின் தரம் பேணப்படுகின்றது. மற்றும் இடம் சார் கால நிலை, நுண்கால நிலை ஆகியவற்றின் தன்மைகளை பேணுவதற்கும் இந்த ஈரநிலங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால் மிதமான வெப்பநிலை நிலவவும் செய்கின்றன.
ஈர நிலங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஈர நிலங்களை பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டே ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 2ம் திகதி இந்த ஈரநில தினம் கொண்டாடப்படுகின்றது.
அதன்படி ஈரநிலைப் பிரதேசத்தில் அழிவடைந்து வரும் தாவரங்களுக்கு பதிலாக மீள்நடுகை மூலம் புதிய தாவரங்களை உருவாக்க வேண்டும், ஈரநில பிரதேசங்களினை பாதுகாப்பு வளையங்களாக அறிவித்து, அதுக்கு பாதிப்பினை ஏற்படுத்துபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
நகர கழிவுகளை ஈரநிலங்களில் கொட்டுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும், தொழிற்சாலை கழிவுகள் போன்றவற்றை ஈரநிலங்களில் சேரவிடாமல் பாதுகாத்தல். இவ்வாறாக எமது செயற்பாடுகளை அமைத்தால் மாத்திரமே ஈரநிலங்களை பாதுகாக்க முடியும்.
முடிவுரை
இயற்கை எமக்கு தந்த அருட்கடைகளில் ஒன்றாகவே இந்த ஈர நிலங்கள் காணப்படுகின்றன. இவை மனித வாழ்வுக்கு பல்வேறு வகையிலும் உதவுபவையாகவே உள்ளன.
எனவே இந்த தொழில்நுட்ப யுகத்தில் ஈரநிலங்களுக்கு பாதகமான செயற்பாடுகளில் இருந்து மனிதர்களாகிய நாம் தவிர்ந்து கொள்வதோடு, அதனை பாதுகாப்பது எம் அனைவரதும் கடமை என்பதனையும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
You May Also Like: