சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமாக உருவாகியுள்ள ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, நாட்டியக்கலை, இசைக்கலை, இலக்கியக் கலை போன்ற கலைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக தோன்றிய நவீன கலையே திரைப்படக் கலையாகும்.
ஆவணப்படம் தயாரிப்பது என்பது திரைப்படத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து வந்த ஒரு சினிமா பாணியாகும். சினிமாவின் முதல் நூற்றாண்டில் ஆவணப்படங்கள் உண்மையை ஊன்றுகோலாகக் கொண்டு உலா வந்த ஒரு உன்னத கலை வடிவமாக கருதப்படுகின்றது.
வழக்கத்திற்கு மாறான, சுவாரஸ்யமான அல்லது தெரியாத கோணத்தை வெளிப்படுத்த ஆவணப்படங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
அனேகமாக, ஆவணப்படங்கள் உண்மையான நபர்கள், இடங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய உண்மைத் தகவல்களை வழங்குவதன் மூலம் பார்வையாளர்களை புதிய உலகங்களுக்கும் அனுபவங்களுக்கும் கொண்டு வருகின்றன.
ஆவணப்படங்கள் வேடிக்கையானவையாக, கடுமையானவையாக, குழப்பமானவையாக, முரண்பாடானவையாக, அபத்தமானவையாக, உத்வேகம் அளிப்பவையாக, அதிர்ச்சியூட்டுபவையாக இருக்கலாம்.
பாரம்பரியமாக, ஆவணப்படங்கள் 30 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை நீளம் கொண்டவை (தொலைக்காட்சியில் அல்லது திரையரங்க வெளியீட்டிற்கு பொருந்தும்). இருப்பினும், ஆவணப்படங்கள் பெரும்பாலும் நீளம் குறைவாகவே உள்ளன.
குறும்படத்துடன் ஒப்பிட்டு நோக்கும் போது ஆவணப்படங்களானவை 3:1 என்ற விகிதாரத்திலேயே எடுக்கப்படுகின்றன. திரைப்படமானது முழுநீளப் படமாக தொடங்குவதற்கு முன்பு ஆவணப்படங்களாகவே ஆரம்பத்தில் தனது பயணத்தைத் தொடங்கியதனைக் காணலாம்.
கலை, கலாசாரம், வரலாறு, பண்பாடு முதலியவற்றை ஆவணப்படுத்துவதன் மூலம் வருங்கால சந்ததியினருக்குப் பெரும் பயன் செய்கின்றனர்.
முன்பெல்லாம் கல்வெட்டுக்கள் செப்புப் பட்டயம் சுவடி ஓவியம் சிற்பம் கட்டிடங்களில் வரலாற்றைப் பதிவு செய்தனர். அதே போல் நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் நாகரீகங்களை ஊடகக் கருவிகளின் வளர்ச்சியை ஒட்டி நாம் ஆவணப் படங்களில் பதிவு செய்கின்றோம்.
கடந்த கால வாழ்வு கடந்தகால அரசியல் கடந்தகால மனிதர்கள் என கடந்தகாலம் பற்றிய பதிவுகள் இல்லாமல் போயிருந்தால் நிகழ்காலமே அர்த்தமற்றதாய் போயிருக்கும் என்பதே நிதர்சன உண்மையாகும்.
ஆவணப்படம் என்றால் என்ன
கிரியர்ஸன் கூற்றுப்படி ஆவணப்படம் என்பது ‘எதார்த்த நிகழ்வை படைப்பாளிமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்கின்றார்.
எனவே பொதுவாக நோக்கின் ஆவணப்படம் என்பது ஏதோ ஒரு வகையில் யதார்த்தத்தைப் படம் பிடிக்கிறது.
பெயர் வரலாறு
ஆங்கிலத்தில் Documentary film என்பதற்கு இணையாகத் தமிழில் “ஆவணப்படம்” என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு முன்பு ஆவணப்படம் என்ற சொல்லுக்கு பதிலாக தகவல் படம், விவரணப் படம், செய்தி படம் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.
ஆவணப்படத்தின் முன்னோடியாக ராபர்ட் ஃப்ளஹர்டி விளங்குகின்றார். இவர் 1926 ஆம் ஆண்டு மோனா என்ற படத்தை எடுத்தார். இவரின் படத்தை லண்டனைச் சேர்ந்த இயக்குனரான ஜான் கிரியர்ஸன் என்பவர் விமர்சனம் செய்யும் போது “டாக்குமென்டரி” என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.
கல்வெட்டுகள் மற்றும், பெரியபுராணம் முதலானவற்றில் ஆவணம், ஆவணக் களரி போன்ற சிறந்த தமிழ் சொற்கள் இடம் பெற்றுள்ளதால், அதையொட்டி ஆவணப்படம் என்ற பெயரைச் சூட்டினார்கள்.
ஆவணப்பட வகை
ஆவணப்படத்தில் வகைகளாக 25 வகைகள் உள்ளன. அவையாவன,
செய்திப்படங்கள், வனவிலங்குகள், கல்வி சார்ந்தவை, மருத்துவம், இனவரலாறு, கட்டிடங்கள், வேளாண்மை, சூழலியல், பெண்ணியம், பறவையியல், மலையேறுதல், மெய்யியல், புராணீகம், அறிவியல் மற்றும் செய்தித் தொடர்பூடகங்கள், சுற்றுலா, வரலாறு நினைவிடங்கள், திருவிழாக்கள் போன்றவை காணப்படுகின்றன.
You May Also Like: