அறிவியல் அழிவு கட்டுரை

ariviyal azhivu

அறிவியல் அழிவு கட்டுரை

உலக வளர்ச்சிக்கு அறிவியல் பெரும் பங்களிப்பு செய்தாலும் பல அழிவியல் செயல்பாடுகளுக்கும் அறிவியல் துணையாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

அறிவியல் அழிவு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அறிவியல்
  3. அறிவியல் வளர்ச்சி
  4. மனித வாழ்வில் அறிவியல் அழிவுகள்
  5. இயற்கையில் அறிவியல் அழிவுகள்
  6. முடிவுரை

முன்னுரை

மனித வாழ்க்கை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு எளிமையும், உயர்வும், செழுமையும் அடைந்துள்ளமைக்கான அடிப்படைக் காரணம் அறிவியல் நிகழ்த்திய அற்புதமாகும்.

ஆயினும் ஆக்கப் பிறப்பித்த அறிவியலின் அற்புதங்கள் இயற்கையையும், இயற்கையின் அரிய படைப்புக்களையும் அழிவினை நோக்கி கொண்டு செல்கிறது.

அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியினால் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு இயற்கை சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு உயிரினங்களின் வாழ்நாளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அறிவியல்

அறிவியல் பொதுவாக இயற்பியல், வேதியல், உயிரியல், சமூக இயல், பயன்பாட்டு அறிவியல், தத்துவ இயல், கணிதவியல் என பல்வேறு கோணங்களில் பகுத்தாயப்படுகிறது.

சரியான தெளிவும், நிரூபணமும், அதற்கான சரியான வரையறையும் இல்லாத முடிவுகளை அறிவியல் வெறும் யூகத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வதில்லை.

மனிதனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத நம்மை சுற்றியிருக்கும் விஷயங்களை, நுட்பமான சிக்கலான இயற்கையின் மர்மங்களை நுணுகி ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து நமக்கு புரிதலை ஏற்படுத்துவதே அறிவியலின் நோக்கமாகும்.

அறிவியலின் வளர்ச்சி

அறிவியல் இல்லையேல் மனித வாழ்க்கையே இல்லை எனக் கருதுமளவிற்கு அறிவியலானது மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது.

மருத்துவம், போக்குவரத்து, வானிலை, வேளாண்மை, கல்வி, வணிகம் என அறிவியல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவிற்கு அறிவியலானது இன்று அனைத்து துறைகளினதும் ஆணிவேராக விளங்குகிறது.

அறிவியலின் பிரமாண்ட வளர்ச்சியினால் மனிதன் பூமியை கடந்து ஏனைய கோள்களுக்கும் பிரவேசித்துள்ளான்.

எமது அன்றாட வாழ்வில் நாம் அறிந்தோ, அறியாமலோ அறிவியலால் உருவாக்கப்பட்ட பல சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றோம். அவை எமது செயல்பாடுகளை இலகுபடுத்துவதோடு நேரத்தையும் மீதப்படுத்துகின்றன.

இவ்வாறாக தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்ட இந்த விரைவான உலகமானது அறிவியலையே ஆதாரமாகக் கொண்டுள்ளது.

மனித வாழ்வில் அறிவியல் அழிவுகள்

கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த மனிதனுக்கு சொகுசான வாழ்க்கையை கற்றுக் கொடுத்தது அறிவியல். இன்று அநேக மனிதர்களை கொன்று குவிப்பதும் அறிவியல் தான்.

இயற்கையால் இடம்பெறும் மரணங்களை விட செயற்கை அறிவியல் சாதனங்களால் தான் அதிகமான மரணங்கள் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

அறிவியல் ஆயிரம் நோய்க்கு மருந்து கண்டுபிடித்தாலும் ஆயிரத்து ஒண்ணாவதாக ஒரு நோய் உண்டாக அறிவியலே காரணமாக இருக்கின்றது.

அறிவியலால் உருவாக்கப்பட்ட செல்போன்களும் பிற மின்னணு சாதனங்களும் சமூகக் கட்டமைப்பிலே பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி மனிதர்களை அதற்கு அடிமைப்படுத்தி வைத்துள்ளது.

மனிதனின் அழிவுக்கு வழிகோலிய மற்றொரு பாரிய கண்டுபிடிப்பு  துப்பாக்கிகளும் அணு ஆயுதங்களும் ஆகும்.

இரண்டாம் உலக போரில் ஹிரோஷிமா, நாகசாகி மீது மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டு வீச்சின் அழிவுகளும் விளைவித்த வேதனைகளின் பாதிப்புக்களும் இன்னும் அங்கு தொடர்கின்றன.

இன்றும் வல்லரசுகளென மகுடம் சூடிக்கொண்ட நாடுகளும் வல்லரசாக துடிக்கும் நாடுகளும் மோதிக் கொண்டு மனிதனை மனிதன் அழிக்கும் நிலைக்கு தள்ளியது அறிவியல் நிகழ்த்திய சாகசங்களில் பெரிதாகும்.

இயற்கையில் அறிவியல் அழிவுகள்

இயற்கை என்பது ஒரு பொக்கிஷம் அதை அளவோடு அனுபவித்து வாழாமல் அறிவியல் மோகத்தால் அதன் சமநிலையை குழப்பியதால் தான் உலகம் அழிவை நோக்கி பயணிக்கின்றது.

மனிதனின் பேராசையே இயற்கை அழிவுக்கு காரணமாகும். “ மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இயற்கை வளங்கள் உள்ளன. பேராசையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அல்ல” என்ற கூற்று இன்றைய காலகட்டத்திற்கு சாலப்பொருந்துகிறது.

அன்று இயற்கையோடு இயற்கையாக ஒன்றிணைந்து வாழ்ந்த மனிதன் இன்று இயற்கையின் கொடைகளான காடுகளை அழித்து, வளங்களை சுரண்டி பாரிய தொழிற்சாலைகளை அமைத்து சுற்றுச்சூழலை சீரழிக்கிறான்.

ஓசோன் படலத்தில் பாதிப்பு, புவி வெப்பமடைதல், அதன் காரணமாக பனிப்பாறைகள் உருகி  கடல் நீர் மட்டம் உயர்தல், விளைநிலங்கள் பாதிப்படைதல், நீர் மாசடைதல் என இயற்கை அழிவுகளின் பட்டியல் நீள்கிறது.

முடிவுரை

நமது முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டு, இயற்கையோடு இணைந்து சிறப்பாக வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்று மனிதன் அறிவியல் என்ற பெயரில் இயற்கையின் இடையில் புகுந்து மனித வாழ்க்கைக்கு உதவி புரிவது போல் ஒரு மாயையை தோற்றுவித்துள்ளான்.

ஆக, அறிவியலால் மனிதனுக்கு அனேக நன்மைகள் கிடைத்தாலும் இறுதியில் மனித குலத்திற்கும் இயற்கையின் இதர படைப்புகளுக்குமான  அழிவுக்கு காரணமாவது அறிவியல் என்பதற்கு மாற்றுக்கருத்து எதுவுமில்லை.

You May Also Like:

கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது